எம்டியுசி மறியல் போராட்டம்: என்யுபிடபுள்யு ஆதரிக்காது

அக்டோபர் 7 இல் நாடாளுமன்றம் சட்டமாக்கிய “ஏற்றுக்கொள்ள முடியாத” வேலைச் சட்டத்திற்கான திருத்தங்களுக்கு எதிராக நாளை மறியல் போராட்டத்தில் இறங்குவதற்கு மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) தாயாராக இருக்கிறது.

அந்த மறியல் போராட்டத்தில் எம்டியுசியில் அங்கம் பெற்றுள்ள 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களில் எத்தனை பங்கேற்கும் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்காது. அச்சங்கம் வேலைச் சட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை வரவேற்கிறது.

அச்சட்டத் திருத்தத்தில் “ஒப்பந்தத் தொழிலாளர்ளை வேலைக்கு கொணரும் குத்தகையாளர்” மற்றும் “முதலாளி” பற்றிய இரு திருத்தங்கள் குறித்து என்யுபிடபுள்யு மன திருப்பதி அடைந்துள்ளது.

பல ஆண்டுகளாக தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தி வந்த குத்தகையாளர்கள் இழைத்தத் துன்பங்களுக்கு முடிவுகட்டியுள்ளதால் இத்திருத்தங்களை அச்சங்கம் வரவேற்கிறது.

“இத்திருத்தங்களை என்யுபிடபுள்யு ஆதரிக்கிறது, ஏனென்றால் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு கொணரும் குத்தகையாளர்கள் இப்போது வரைமுறைபடுத்தப்பட்டுள்ளனர். இத்திருத்தங்கள் குத்தகையாளர்கள் பதிவு செய்யப்படுவதற்கு வழி செய்துள்ளது. வேலை சார்ந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் அவை அமைச்சின் தலைமை இயக்குனரின் நேரடி கவனத்திற்கு வரும்”, என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயல்முறை செயலாளர் எ. நவமுகுந்தன் கூறினார்.

குத்தகையாளர்கள் சம்பந்தப்பட்ட தமது மற்றும் சங்கத்தின் அனுபவங்கள் பற்றி கூறிய அவர், “காலையில் ஒரு குத்தகையாளர் இருப்பார்; மதியத்தில் இன்னொரு குத்தகையாளர் இருப்பார். இதை நிருவாகிப்பது ஒரு பயங்கரமான காரியமாகும். இப்போது, இந்தத் திருத்தங்கள் இதற்கு முடிவைக் கொண்டு வரும்.”

மனிதவள அமைச்சின் அதிகாரிகளுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டு உடன்பாடுகள் காணப்பட்டதாக அவர் கூறிக்கொண்டார்.

என்யுபிடபுள்யு இந்த சட்டத் திருத்தங்களுக்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளது என்று மனிதவள அமைச்சர் எஸ். சுப்ரமணியம் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த விவகாரம் ஆசியா பசிபிக் வட்டார அனைத்துலக தொழிற்சங்கங்கள் புதுடில்லியில் நடத்திய கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களை உடைப்பதற்கான தீயநோக்கம் எதனையும் நவமுகுந்தன் இத்திருத்தங்களில் காணவில்லை.

ஆனால், அதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளார் தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (NUBE) பொதுச்செயலாளர் எஸ்.சோலமன். இத்திருத்தங்களின் முக்கியமான நோக்கம் “தொழிற்சங்கங்கள் உடைப்பு” ஆகும் என்றாரவர்.

வங்கித்துறை தொழிலாளர்களை குத்தகை மூலம் பெறுவதில் தீவிரம் காட்டுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களின் இடத்தை தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்புகிறது. இத்தற்காலத் தொழிலாளர்களை குத்தகையாளர்கள் விநியோகிக்கின்றனர் என்று சோலமன் கூறிக்கொண்டார்.

ஒரு வங்கி அதன் அஞ்சல் இலாகாவை ஒப்பந்தத் தொழிலாளர்கள் விநியோக குத்தகையாளர்கள் நிறுவனம் “அ” விடம்  ஒப்படைத்துள்ளது. நிறுவனம் “அ” அதனை நிறுவனம் “ஆ” விடம் ஒப்படைத்தது. நிறுவனம் “ஆ” அதனை நிறுவனம் “இ” ஒப்படைத்தது. ஆனால், நிறுவனம் “இ”யின்  தொழிலாளர்கள் அனைவரும் நிறுவனம் “அ”வின் சீருடையை அணிகின்றனர். சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைவதற்கான வழிகள் இல்லை. வங்கியின் அஞ்சல் இலாகாவில் முன்னிருந்த தொழிலாளர்கள் பல்வேறு வழிகள் மூலமாக அகற்றப்படுகின்றனர். “இப்படித்தான் தொழிற்சங்கங்கள் உடைப்பு நடத்தப்படுகின்றன”, என்று சோலமன் தெரிவித்தார்.

இச்சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய செக்சன் 101B யைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். நிறுவனம், கூட்டு வாணிகம், மன்றங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் தாங்கள் பதவியில் இருந்த காலத்தில் புரிந்த குற்றங்களுக்குத் தண்டனை அளிப்பது பற்றியதாகும்.

இதில் அனைவருக்கும் தண்டனை உண்டு என்றாலும், மன்றங்கள் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றை பொருத்த வரையில் அவற்றின் அனைத்து அதிகாரிகளும் அக்குற்றத்தைப் புரிந்தவர்களாக கருத்தப்படுவர். இது தொழிற்சங்க தலைமைத்துவத்தைத் துடைத்தொழிப்பதற்கான ஒரு சதித் திட்டம் – “தொழிற்சங்க தலைமைத்துவத்தை ஒழித்துக்கட்டுவதின் வழி தொழிற்சங்கத்தை ஒழித்துவிடலாம்” என்று சோலமன் வர்ணித்தார்.

அமைச்சர் சுப்ரமணியம் கூறியிருப்பதுபோல் சட்டத் திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்கு 18 கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றாரவர்.

தொழிலாளர்கள் அரசியல் ஈடுபாட்டிற்குத் தள்ளப்படுகின்றனர்

முத்தரப்புக்குழுவான தேசிய தொழில் ஆலோசனை மன்றம் இந்தத் திருத்தங்களை விவாதிக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அனைத்து திருத்தங்களையும் ஒன்றாகக் கவனிக்கும்போது “இந்நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தைத் துடைத்தொழிப்பதற்கான தெளிவான தொடக்கம் இதில் காணப்படுகிறது” என்று கூறிய சோலமன், “நாம் இதனை எதிர்க்காமல் விட முடியாது”, என்றார்.

ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளால் தொழிலாளர்கள் அரசியலுக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது அவரது கருத்தாகும்.

இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு சட்டப்படி மனிதவள அமைச்சர்தான் பொறுப்பு என்பதால் நாடாளுமன்றத்திற்கான அடுத்த பொதுத்தேர்தலில் அவர் எங்கு போட்டியிட்டாலும் தொழிலாளர்கள் அவரை எதிர்ப்பாளர்கள் என்றார் சோலமன்.

எம்டியுசி நடத்தும் மறியல் போராட்டத்திற்கு என்யுபியின் உறுப்பினர்கள் முழு ஆதரவு வழங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய சுவைபான நீர் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நடராஜன் மறியல் போராட்டத்திற்கு அச்சங்கத்தின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.

அவரது தொழிற்சங்க உறுப்பினர்களுடன் ஜாலான் ராஜா லாவுட்டில் இருப்பேன் என்றாரவர்.

“இந்தத் திருத்தங்கள் தொழிற்சங்க இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை என்பது தெளிவாகும். தொழிலாளர்களின் அரசியல் ஈடுபாடு தவிர்க்க இயலாததாகி வருகிறது.

“அவர்கள் திருத்தங்களைத் திரும்பப் பெற்றாக வேண்டும். இல்லையேல், எதிர்வரும் பொதுத்தேர்தலில் நாங்கள் அவர்களை எதிர்கொள்வோம். பெரும்பான்மையான தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை ஆதரிப்பர் என்று நம்புகிறேன்”, என்று நடராஜன் கூறினார்.

TAGS: