கல்வியாளர் அணிவகுப்பு: உங்கள் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

‘ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் தில்லுமுல்லு செய்யும் பல விஷயங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கல்வி கற்ற மலாய்க்காரர்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்’

புத்ராஜெயாவுக்கு அணிவகுத்துச் செல்ல கல்வியாளர்கள் யோசனை

பெண்டர்: நமது கல்வியாளர்கள் நீண்ட காலமாக ‘உணவைத் தேடும்’  (cari makan) கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளனர். அதனால் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி-க்கு ஆதரவு அளிக்கும் துணிச்சல் கூட அவர்களுக்கு இல்லை. காரணம் அவர்களுக்கு தங்கள் சொந்த வாழ்வு ஆதாரமே பெரிதாக போய் விட்டது.

அவர்கள் ஏணியில் எந்த அளவுக்கு உயருகின்றனரோ அந்த அளவுக்கு அவர்கள் மௌனமாகி விடுகின்றனர். கருத்துக்களை சொல்வதில்லை. ஆதரவும் வழங்குவதில்லை. ஆகவே தேசியப் பேராசிரியர் மன்றம் அப்துல் அஜிஸுக்கு ஆதரவு அளிக்கும் என எண்ணக் கூடாது.

அந்த மன்றத்தில் உள்ளவர்கள் ஏணியின் உச்சத்திற்குச் சென்று விட்டவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் சகாவுக்காக தங்களுடைய நிலையைப் பணயம் வைக்க மாட்டார்கள். அதனால் அவரை  பலி கொடுக்கவும் தயாராகவும் இருப்பார்கள்.

ஆகவே அந்தக் கருத்து உண்மையானால் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஈராயிரம் கல்வியாளர்களில் 60 பேர் மட்டுமே அப்துல் அஜிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதில் வியப்பில்லை.

ஜேபிசுவாரா: சமூகத்தைப் பாதிக்கின்ற நடப்பு விவகாரம் மீது உயர் கல்விக் கூடங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என பொதுவாக மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பெரும்பாலான கல்வியாளர்கள் மௌனமாக இருக்கின்றனர் அல்லது சமூகத்திலிருந்து வெகு காலத்துக்கு முன்பே பிரிந்து விட்டனர்.

உயர் கல்வியாளர்கள் சமூகத்தில் அறிவாற்றல் மிக்கவர்கள். ஆகவே அவர்களுடைய கருத்துக்களை சாதாரண மக்கள் மதிக்கின்றனர்.

தயவு செய்து நடப்பு அரசியல் சமூகப் பிரச்னைகள் மீது தங்கள் எண்ணங்களைத் துணிச்சலாக வெளியிடும் உங்கள் மேற்கத்திய சகாக்களைப் பின்பற்றுங்கள்.

அமிருல் ஷா: ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் தில்லுமுல்லு செய்யும் பல விஷயங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கல்வி கற்ற மலாய்க்காரர்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்.

நீதி பரிபாலனம், போலீஸ் முரட்டுத்தனம், பாகுபாடு காட்டும் செய்தி ஊடகங்கள், பேச்சுச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகள், ஆங்கிலத்தில் அறிவியலையும் கணிதத்தையும் போதிக்கும் கொள்கையை மாற்றியது ஆகியவை முக்கியமான விஷயங்களாகும்.

ஸ்விபெண்டர்: கல்வியாளர்களே,  “புத்ராஜெயாவுக்கான அணிவகுப்பில் ” இணைந்து கொள்ளுமாறு உங்கள் மாணவர்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஏளனம் செய்யப்பட்டால் இயல்பாகவே உங்கள் மாணவர்களும் ஏளனம் செய்யப்படுவர். சுதந்திரமாக சிந்திக்குமாறு நீங்கள் அவர்களை ஊக்குவித்தால் அவர்கள் எது சரி எது தவறு என்பதை உணரும் ஆற்றலை பெறுவர்.

நமது பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் உருவகம் செய்யப்பட்ட வழிகளுக்கு ஏற்ப பட்டம் பெறுகின்றனர். வெளியில் வருகின்றனர். இப்போது அவர்கள் எந்திரன்களைப் போன்று பட்டம் பெறுகின்றனர். காரணம் பேச்சுச் சுதந்திரம் இல்லை. சிந்தனைச் சுதந்திரமும் இல்லை.

ஆளும் அரசியல்வாதிகளுடைய சிந்தனைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுடைய மூளை சலவை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பலர் அடுத்து பிடிஎன் என்ற தேசிய குடியியல் பிரிவின் மூளைச்சலவைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

அடையாளம் இல்லாதவன்: நாங்களும் சேர்ந்து கொள்ளலாமா ?

TAGS: