’கடைகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்’: வருகிறது புதிய சட்டம்

waste_food_001பிரான்ஸ் நாட்டில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை ஆகாத மற்றும் விற்பனை காலம் முடிந்த உணவு பொருட்களை உபயோகம் இல்லாமல் வீதிகளில் வீசி வருவது அதிகரித்து வருகிறது.

அதே சமயம், ஆண்டுதோறும் ஒவ்வொரு வீடுகளிலிருந்து பயன்படுத்தாத சுமார் 20 முதல் 30 கிலோ எடையுள்ள உணவு பொருட்களை குப்பை தொட்டிகளில் வீசி வந்தனர்.

ஆனால், இந்த அளவானது தற்போது 140 கிலோ எடையாக அதிகரித்துள்ளது பிரான்ஸ் உணவு துறையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

போதிய உணவு இல்லாமல் அவதிப்படும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உள்ள நிலையில், இவ்வாறு உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க ஒரு புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு பலசரக்கு கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை ஆகாத மற்றும் விற்பனை காலம் முடிந்துள்ள உணவு பொருட்களை வீணாக குப்பை தொட்டிகளில் வீசுவதற்கு பதிலாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்த உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு அவர்களிடம் அந்த உணவு பொருட்களை வழங்கலாம்.

இந்த திட்டம் தொடர்பாக, கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராபட்சம் இன்றி இந்த திட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

உணவு பொருட்கள் வீணாவது தொடர்பாக பேசிய குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Jean-Pierre Decool, ‘’பல சரக்கு பொருட்கள், ரொட்டி துண்டுகள், மாட்டிறிச்சைகளை வீணாக குப்பை தொட்டியில் வீசுவது என்பது 15,000 லிற்றர் தண்ணீரை வீணாக்குவதற்கு சமம்’’ என பேசியுள்ளார்.

இந்த புதிய சட்டத்தை கடந்த மே மாதமே அறிமுகப்படுத்த இருந்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சில சட்ட சிக்கல்களால் அது தடைப்பட்டது.

ஆனால், அந்த சட்ட சிக்கல்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டு எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com