காம்பியா இஸ்லாமிய நாடாக அறிவிப்பு

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காம்பியா, இஸ்லாமிய நாடு என அதன் அதிபர் யாஹியா ஜாமே அறிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்டார். ஆனால் அந்தப் பேச்சு அரசுத் தொலைக்காட்சியில் பின்னர் வெளியான பிறகுதான் அது பரவலாகத் தெரிய வந்தது.

அதிபரின் வலைதளத்திலும் அவரது அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவர் கூறியதாவது:

காம்பியா இனி இஸ்லாமிய நாடாகத் திகழும். இஸ்லாமிய தேசமாக இருந்தபோதிலும், அனைத்துக் குடிமக்களின் உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும்.
இஸ்லாமிய மதத்துக்கான பாதுகாவலர்களாக நான் யாரையும் நியமிக்கவில்லை. பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவர்கள் விருப்பத்தைப் பொருத்தது. அதில் பிறர் தலையிடத் தேவையில்லை.

கிறிஸ்தவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர்கள் வழக்கம் போலக் கொண்டாடலாம். பிறருடைய வாழ்க்கை முறையில் குறுக்கிட யாருக்கும் உரிமையில்லை என்று அவர் கூறினார்.

பிரிட்டனின் காலனியாக இருந்த காம்பியா, 1965-இல் சுதந்திரம் பெற்றது. சுமார் 18.8 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில், ஏறத்தாழ 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள் சுமார் 8 சதவீதத்தினர். ஏனையோர் பழங்குடியினர்.

முன்னாள் ராணுவ அதிகாரியான யாஹியா ஜாமே, 1994-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றி அதிபரானார். அதன் பிறகு தொடர்ந்து ஆட்சிபுரிந்து வருகிறார்.

காம்பியாவை இஸ்லாமிய தேசமாக அறிவித்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.
“மக்கள் பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிபருக்கு எப்போதெல்லாம் பதவி பறி போகும் அச்சம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் வினோதமான அறிவிப்புகளை அவர் வெளியிடுவது வழக்கம்’ என்று அந்தக் கட்சியின் தலைவர் உசேனு தார்போ கூறினார்.

-http://www.dinamani.com