சீனாவை உலுக்கும் காற்று மாசு.. இம்மாதத்தில் 2வது முறையாக “ரெட் அலர்ட்”!

china345பெய்ஜிங்: சீனாவில் காற்று மாசுபாடு பெரும் மிரட்டலாக மாறி வருகிறது. இந்த மாதத்தில் 2வது முறையாக மக்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தொழில்துறையில் முன்னிலை வகித்து வரும் நாடுகளின் வரிசையில் சீனாவும் ஒன்று.

அந்நாட்டில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடு மற்றும் பெருகி வரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையால் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

சுத்தமான காற்றை பாட்டில்களில் அடைத்து விற்போரிடமிருந்து அதை விலைக்கு வாங்கும் நிலைக்கு சீனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாசு அதிகரித்து வருவதைத் தொடர்ந்தும், புகை மாசு அதிகமாக இருப்பதாலும் முதல்முறையாக, இம்மாத துவக்கத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டது.

அப்போது கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னர், அவை விலக்கி கொள்ளப்பட்டன. இந்நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக புகை மூட்டம் அதிகரித்துள்ளதாக கூறி, தொடர்ந்து நான்கு நாட்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு சீன மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திகொண்ட விடாலிட்டி ஏர் என்ற கனடா நாட்டு நிறுவனம் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது.

சீனாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டினால், ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஒரு ஆய்வுத்தகவல் கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 4,400 பேர் உயிரிழக்கின்றனர்.

tamil.oneindia.com