பிரான்ஸில் தொடரும் அச்சுறுத்தல்: இஸ்ரேல் நாட்டில் குடியேறிய 8,000 யூதர்கள்

jews_001பிரான்ஸ் நாட்டில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 8,000 யூதர்கள் இஸ்ரேல் நாட்டில் குடியேறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை யூத மதத்தை சார்ந்த பிரான்ஸ் குடிமக்கள் வசித்து வருகின்றனர்.

இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக அளவிலான எண்ணிக்கை ஆகும். ஆனால், நீண்ட காலமாக பிரான்ஸ் நாட்டில் யூதர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்ற சூழல் நிகழ்ந்து வந்துள்ளது.

உதராணத்திற்கு கடந்த ஜனவரி மாதம் பாரீஸ் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலால் அதிருப்தி அடைந்த இஸ்ரேல் நாட்டு பிரதமரான பெஞ்சமின் நடான்யாகூ ‘உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் இஸ்ரேல் நாட்டிற்கு வாருங்கள்’ என யூதர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், இந்த தாக்குதல் யூத சமுதாயத்தினரிடைய அச்சத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டை விட்டு யூதர்களுக்கு பாதுகாப்பான நாடான இஸ்ரேலில் குடியேறி தொடங்கியுள்ளனர்.

இதன் விளைவாக, இஸ்ரேல் நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில், 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 8,000 யூதர்கள் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறி இஸ்ரேலில் குடியேறியுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில், இது 10 சதவிகித அதிகரிப்பாகும் என இஸ்ரேல் நாட்டு அரசு செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல் ஒரு காரணமாக இருந்தாலும், பிரான்ஸ் நாட்டில் போதுமான வருமானத்தை ஈட்ட முடியவில்லை என்பதும் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு காரணம் என யூதர்கள் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் நாடு மட்டுமின்றி, உக்ரைன் நாட்டிலிருந்து 7,300 யூதர்கள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளிலிருந்து 7,100 யூதர்கள், வட அமெரிக்காவிலிருந்து 3,500 யூதர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு குடியேற வந்துள்ளதாக இஸ்ரேல் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள சுமார் 81 லட்சம் மக்கள் தொகையில், 75 சதவிகிதத்தினர் யூதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com