மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்-தில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வி அங்கு இருந்ததாக கூறப்படுவதை பெர்த்-தில் மலேசியத் துணைத் தூதர் ஹமிடா அஸ்ஹாரி மறுத்துள்ளார்.
நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று “பேராளர்கள் சுற்றிப் பார்த்தனர், பொருட்களை வாங்கினர்” என்னும் தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியில் நஜிப்பின் புதல்வி, டேவிட் ஜோன்ஸ் பேரங்காடியில் 60,000 ஆஸ்திரேலிய டாலரை ( 195,000 ரிங்கிட்) செலவு செய்ததாக சொல்லப்பட்டிருந்தது.
“காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட குழுவில் பிரதமரது புதல்வி இடம் பெறவில்லை என்பதையும் அவர் அந்த நேரத்தில் பெர்த்தில் இல்லை என்பதையும் மலேசியத் துணைத் தூதரகம் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.”
“ஆகவே அவர் பொருட்களை வாங்கினார் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை,” என ‘ஆசிரியருக்கான கடிதங்கள்’ பகுதியில் வெளியிடப்பட்ட கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நஜிப்பின் புதல்வி பெர்த்தில் இருந்ததாகக் கூறப்படுவதை நஜிப்ப்பின் அரசியல் செயலாளர் பாட்மி சே சாலே மறுத்துள்ள செய்தியையும் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
“எனக்குத் தெரிந்த வரை அவர் பிரதமருடன் செல்லவில்லை.”
“எனவே அவர் அங்கு இல்லை என்றால் அந்தச் செய்தியும் தவறானது,” என பாட்மி கோத்தாபாருவில் நிருபர்களிடம் கூறியதாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.
மேற்கு ஆஸ்திரேலிய நாளேட்டில் அந்தச் செய்தி வெளியான பின்னர் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் வலைப்பதிவாளர்களும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு நஜிப்பையும் ரோஸ்மாவையும் கடுமையாகக் குறை கூறி வருகின்றனர்.