போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10.9 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி 2015-ஆம் ஆண்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அரசு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:
2015-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10.9 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி தஞ்சம் அளித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கை இதுவேயாகும்.
மேலும், முந்தைய 2014-ஆம் ஆண்டில் ஜெர்மனி ஏற்றுக்கொண்ட அகதிகளின் எண்ணிக்கையைப் போல் ஐந்து மடங்காகும்.
டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி, 1.17 லட்சம் பேர் அகதிகளாகப் பதிவு செய்துள்ளனர்.
அந்த எண்ணிக்கையுடன், இந்த ஆண்டு ஜெர்மனியில் தஞ்சமடைந்த மக்களின் எண்ணிக்கை 10.9 லட்சம் ஆக இருக்கும்.
உள்நாட்டுச் சண்டை, பயங்கரவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மேற்காசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய வரும் அகதிகளின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டு உச்ச எண்ணிக்கையைத் தொட்டது.
மிக அதிக எண்ணிக்கையில் வரும் அவர்களுக்காக எல்லையைத் திறந்துவிட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் கடந்த செப்டம்பர் மாதம் முடிவெடுத்தார்.
இந்த முடிவால் மெர்கெல் ஒரு சாராரிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றாலும், எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஜெர்மனி மக்கள் தொகையான 8 கோடியில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான அகதிகள் குவிந்துள்ளது குறித்து பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2016-ஆம் ஆண்டில் அகதிகள் வரத்தைக் குறைக்கவிருப்பதாக மெர்கெல் அறிவித்துள்ளார்.
சிரியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் வரும் வழியில் அமைந்துள்ள துருக்கி நாட்டின் எல்லைகளை பலப்படுத்துவது, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது, அகதிகளை அதிக அளவில் பகிர்ந்து கொள்ள பிற ஐரோப்பிய நாடுகளையும் வற்புறுத்துவது ஆகியவை அவரது திட்டங்களில் சில.
-http://www.dinamani.com