வட கொரியா வெடிகுண்டு சோதனை: இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை!

un_2day_001நியூயார்க்: வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை காரணமாக ஆலோசனை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை இன்று அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வடகொரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கில்ஜு என்ற பகுதியில் வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மையம் அமைந்துள்ளது. முன்னதாக, மூன்று முறை வட கொரியா அணு ஆயுதங்களை இங்கு வைத்து சோதனை நடத்தியுள்ளது.

கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கு சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் உலக நாடுகளுக்கு தெரியாமல் பூமிக்கு அடியில் நேற்று அணுகுண்டு சோதனை நடத்தியது வட கொரியா. இந்த அசால்ட் துணிச்சல் உலக நாடுகளை வட கொரியா நோக்கி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது மட்டுமல்லாமல் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் இந்த சோதனைக்கு இந்தியா, ஜப்பான், தென் கொரிய உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் புதன்கிழமை (அமெரிக்க நேரப்படி காலை 11 மணி – இந்திய நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு) நடைபெறுகின்றது.

இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கின்றனர். இந்த அவசரக் கூட்டம் மூடிய கதவுகளுக்குள் ரகசியமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சர்வதேச சமுதாயத்தால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவுக்கு எதிராக இந்த கூட்டத்தில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tamil.oneindia.com