ஈராக்கில் முக்கிய நகரை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் சண்டை

ram_isis_001ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அன்பார் மாகாணத்தின் தலைநகரும் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றுமான ரமாடி நகரை நீண்டநாள் போராட்டத்துக்கு பின் அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது.

இது ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுவதோடு, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த பின்னடைவாகவும் அமைந்தது. ஆனால் தற்போது அங்கு மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கை ஓங்க தொடங்கி உள்ளது. அன்பார் மாகாணத்தின் மற்றொரு முக்கிய நகரான ஹடிதாவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு பயங்கர தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

ஈராக் ராணுவத்தினரும் ஹடிதா நகரின் பழங்குடி போராளிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 250 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். அதே போல் ராணுவம் மற்றும் பழங்குடி போராளிகளின் தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டுக்குள் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படுவார்கள் என அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்–அபாடி சூளுரைத்திருப்பது நினைவுகூரத்தக்கதாகும்.

-http://www.athirvu.com