இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம்:பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

india-pakistan-flag_0இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை சீர்குலைக்க எந்த பயங்கரவாதக் குழுக்களையும் தங்களது நாடு அனுமதிக்காது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையைச் சீர்குலைப்பதற்கு எந்த பயங்கரவாத குழுவையும் அனுமதிக்க மாட்டோம். மனித குலத்தின் எதிரிகளான பயங்கரவாதிகளை, எந்த வடிவில் அவர்கள் இருந்தாலும் பாகிஸ்தான் கண்டிக்கிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் எந்த சக்திகள் ஈடுபட்டாலும், அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜர்ப்-இ-அஸ்ப் என்ற பெயரில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையில், சில பயங்கரவாத அமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சிய பயங்கரவாத அமைப்புகளையும் அழிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில், பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் பயங்கரவாதம் எனும் அச்சுறுத்தலை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் உள்ளது என்று அந்த பேட்டியில் கவாஜா முகமது ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் அண்மையில் அளித்த பேட்டியில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சில சக்திகள் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“திட்டமிட்டபடி 15ஆம் தேதி பேச்சுவார்த்தை’

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள், திட்டமிட்டபடி வரும் 15ஆம் தேதி சந்தித்துப் பேசுவார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் திட்டமிட்டபடி 15ஆம் தேதி சந்தித்துப் பேசுவார்கள். பேச்சுவார்த்தைக்கான நேரத்தை அவர்கள் இருவரும் முடிவு செய்வார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பல்வேறு விவகாரங்களுடன் சேர்த்து காஷ்மீர் பிரச்னைகுறித்தும் பேசப்படும் என்றார் அஜீஸ்.

-http://www.dinamani.com