தென் கொரிய ஒலிபெருக்கிப் பிரசாரத்தால் போர் வெடிக்கும்:வட கொரியா மிரட்டல்

missile-north-koreaவட கொரிய எல்லை அருகே அந்த நாட்டுக்கு எதிராக தென் கொரியா தொடங்கியுள்ள ஒலிபெருக்கிப் பிரசாரத்தால் போர் வெடிக்கும் என வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

வட கொரியா கடந்த புதன்கிழமை ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தியது.

அதற்குப் பதிலடியாக, தென் கொரியா ஒலிபெருக்கிப் பிரசாரத்தை மீண்டும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பாப் இசை, வானிலை செய்தியறிக்கைகள் போன்றவற்றுடன், பெரும்பாலும் வட கொரிய சர்வாதிகார அரசுக்கு எதிரான பிரசாரங்கள் அந்த ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பாகின்றன.

இந்த நடவடிக்கை படையெடுப்புக்கு நிகரானது என வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆளும் கட்சி முக்கியத் தலைவர் ஒருவர் பேசியதாவது:

எல்லைப் பகுதியில் தென் கொரியா ஒலிபெருக்கிப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

மேலும், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய அமெரிக்க விமானங்களை தென் கொரியாவில் நிறுத்துவது குறித்து இரு நாடுகளும் பேசி வருகின்றன.

இந்த நடவடிக்கைகள், கொரிய தீபகற்பத்தை போரின் விளிம்புக்குக் கொண்டு சென்றுள்ளன என்றார் அவர்.

எல்லைப் பகுதியில் சுமார் 10 இடங்களில் நடைபெறும் ஒலிபெருக்கிப் பிரசாரத்தை, வட கொரியாவையொட்டிய ஒரு தீவிலும் விரிவுபடுத்த தென் கொரியா திட்டமிட்டுள்ளது.

சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்

இந்தப் பிரசாரம், வட கொரியாவில் சுமார் 10 கி.மீ. தொலைவுக்குக் கேட்கும் எனக் கூறப்படுகிறது.

இவற்றை, எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களும், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தெளிவாகக் கேட்க முடியும்.

கொரியப் போர் காலத்திலிருந்து உளவியல் போர் தந்திரமாகப் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிப் பிரசாரத்தை, தென் கொரியா 11 ஆண்டு இடைவெளிக்குப் பின் வட கொரிய எல்லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.

எனினும் தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின், பிரசார ஒலிபரப்பை நிறுத்த தென் கொரியா ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில், வட கொரியாவின் ஹைட்ஜன் குண்டு பரிசோதனை புதிய பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.

-http://www.dinamani.com