தென்கொரியாவின் வான் எல்லையில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் பறந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாகவே வடகொரியாவுக்கு தென் கொரியாவுக்கும் இடையே தீரா பகை இருந்துவருகிறது
இந்நிலையில் கடந்த 6ம் திகதி அணுவை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜனை வெடித்து வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்தது.
இதனால் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் மற்றும் தென் கொரியா குற்றஞ்சாட்டின. மேலும் வடகொரியாவின் இந்த செயல் உலக நாடுகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஹைட்ரஜன் குண்டு வெடிப்பை நியாயப்படுத்திய வடகொரியா, ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்திருப்பது தற்காப்பு நடவடிக்கைதான்.
பிராந்தியத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அணுகுண்டு போர் அபாயத்தில் இருந்து காப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை.
இது இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் சட்டப்பூர்வமான உரிமை. இதனை யாரும் விமர்சிக்க முடியாது என்று கூறியிருந்தது.
இந்நிலையில் அணு ஆயுதங்களை வீசக்கூடிய பி-52 ரக போர் விமானத்தை தென்கொரியாவின் மீது அமெரிக்கா பறக்க விட்டது.
இதனுடன், தென்கொரியாவின் எப்-15 ரக போர் விமானங்களும், அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்களும் அணிவகுத்தன. பின்னர் அவை தங்களது தளத்துக்கு திரும்பியது.
அமெரிக்க பசிபிக் ராணுவ தளபதி அட்மிரல் கூறுகையில், அமெரிக்கா நட்பு நாடுகளான தென்கொரியா, உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டு தற்பாதுகாப்புக்கு அளித்துள்ள உறுதியான வாக்குறுதியின் வெளிப்பாடுதான் தென்கொரியா மீது அமெரிக்காவின் போர் விமானம் பறந்த செயல் என்று தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது சக்திவாய்ந்த போர் விமானத்தை பறக்க விட்டிருப்பது, கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட கொரியாவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவே இது பார்க்கப்படுகிறது.
-http://world.lankasri.com