வரலாற்றில் முதன் முறையாக ஸ்பெயின் இளவரசி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: 8 வருடங்கள் சிறை தண்டனை?

spain_queen_001ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன் முதலாக மன்னரின் சகோதரியும் இளவரசியுமான கிறிஸ்டினா மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயின் மன்னரான ஃபெலிப்பிற்கு இளவரசி கிறிஸ்டினா (50) என்ற சகோதரி உள்ளார்.

இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு மிகப்பெரிய தொழிலதிபரான இனாகி உர்டாங்கரின் என்பவருக்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பின்னர் இருவரும் இணைந்து நூஸ் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினர். இந்த தொண்டு நிறுவனத்திற்கு வரும் பொது நிதியை கையாடல் செய்த குற்றத்திற்காகவே தற்போது இருவர் மீது வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

குறிப்பாக, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தொண்டு நிறுவனத்திற்கு வந்த சுமார் 6.1 மில்லியன் டொலர் நிதியை இனாகி தனது சொந்த வங்கி கணக்குகளில் சேர்த்தாக கூறப்படுகிறது.

இந்த பண பரிவர்த்தனையில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடந்ததாகவும், இதற்கு அவரது மனைவியும் இளவரசியுமான கிறிஸ்டினாவும் துணைபோனதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருவர் தவிர எஞ்சிய 16 அதிகாரிகள் மீதும் இந்த வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் முதல் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. இளவரசியும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

இருவரின் மீதுள்ள வரி ஏய்ப்பு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், கணவரான இனாகிக்கு சுமார் 20 வருடங்களும், இளவரசியான கிறிஸ்டினாவிற்கு 8 வருடங்களும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன் முதலாக அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி ஒருவர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு விதிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com