சீனாவின் நிலை கண்டு உலக நாடுகள் கடும் அதிர்ச்சி

china_collapses_001சீனாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 25 ஆண்டுகளில் மிகக்குறைவாக, 2015ல், 6.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், உலகளவில் பொருளாதார நிலை பற்றிய கவலை தொற்றிக் கொண்டுள்ளது.சீனாவின் தேசிய புள்ளியியல் மையம், நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:கடந்த, 2015ல், நான்காம் காலாண்டில், சீன பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதமாக சரிந்துள்ளது. 2009ல், உலக பொருளாதாரம் கடுமையாக சரிந்தபோது, இந்த விகிதம் காணப்பட்டது. 2015ம் நிதியாண்டில், சீன பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதம் மட்டுமே.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 690 லட்சம் கோடி ரூபாய். இதில், 50.5 சதவீதம், சேவைத் துறையால் கிடைக்கிறது. முதல் முறையாக, உற்பத்தித் துறையை பின்னுக்குத் தள்ளி, சேவைத் துறையின் வளர்ச்சி விகிதம், 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன பொருளாதார தேக்கநிலை குறித்து, அந்த நாட்டின் புள்ளியியல் மையத்தின் தலைவர் வாங் போவான் கூறியதாவது:கடந்த, 2015ம் நிதியாண்டில், நியாயமாக எதிர்பார்க்கக் கூடிய அளவுக்கு, பொருளாதார வளர்ச்சி விகிதம் எட்டப்பட்டுள்ளது. புதிய வளர்ச்சிக்கான கட்டமைப்புகள் வலிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.அதேசமயம், அனைத்து துறைகளிலும், சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையில், நாம் உள்ளோம். தொழில்துறை கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வீடே கட்ட வேணாம்!

சீனாவில், புதிய வீட்டுக் கட்டுமானங்கள், முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2015ல், 14 சதவீதம் குறைந்துள்ளது. வீடுகளில் செய்யப்படும் முதலீடுகள், மொத்த சொத்து முதலீட்டில், மூன்றில் ஒரு பங்கு வகிக்கின்றன. இதன் வளர்ச்சி விகிதம், 0.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஊக்க சக்தியாக திகழும், சொத்து முதலீடு, வெகுவாக குறைந்துள்ளதால், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி
விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடரும் சரிவு

சீன பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, அந்த நாட்டு பங்குச் சந்தையில், கடந்தாண்டு, கடுமையாக எதிரொலித்தது. அதனால், சர்வதேச அளவில், பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளும் அதல  பாதாளத்தில் சரிந்தன.கடந்தாண்டில், சீன பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால், 214 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சீனப் பங்குச் சந்தையில் இருந்து, இரண்டு கோடி முதலீட்டாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து, உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் ஊசலாடி வருகின்றன.சீன பொருளாதார வளர்ச்சி விகிதம், 6.8 சதவீதத்துக்கு கீழே சரிந்தால், அதை சரிக்கட்ட, தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு ஊக்க சலுகைகளை, அந்நாட்டு அரசு அளிக்க
வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதைத் தவிர்க்க, சீன அரசு போராடி  வரும் நிலையில், 2015 நிதியாண்டின் கடைசி காலாண்டில், 6.8 சதவீத வளர்ச்சியே எட்டப்பட்டுள்ளது.

-http://www.athirvu.com