டுவலா: கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கேமரூனின் போடோ நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மத்திய மார்க்கெட் பகுதியில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நகரின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதியில் நுழைந்த 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போடோ நகரை தீவிரவாதிகள் குறிவைப்பது இது முதல் முறையல்ல. டிசம்பர் இறுதியில் இரண்டு பெண் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மார்க்கெட்டுக்குள் வருவதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஜனவரி 13ல் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.