வேலைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் மறியல் போராட்டம் நடத்தினர்.

நாட்டில் இருபது இடங்களில் நடந்த தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) முன்னின்று நடத்தியது.

சட்டத் திருத்தத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்களை விநியோகிக்கும் குத்தகையாளர்களுக்கு, எதிராகத் தொழிலாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

குத்தகையாளர் சம்பந்தப்பட்ட திருத்தம் முதலாளிகள் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களை விநியோகிக்கும் குத்தகையாளர்களிடமிருந்து பெறுவதற்கு வகை செய்கிறது. இது தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

“தொழிலாளர்கள்தான் பெரும்பாலான வாக்காளர்கள்”

பெட்டாலிங் ஜெயாவில் பிஜெ ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பு மாலை மணி 5.00 க்கு கூடத் தொடங்கிய தொழிலாளர்கள் கூட்டம் சுமார் 200 லிருந்து 700 க்கு கூடியது. 

அவர்கள் “தாரிக் பாலிக்”(திரும்பப் பெற்றுக்கொள்) என்று தெருவின் இருபுறங்களில் நின்று கொண்டு முழக்கமிட்டனர்.

அவர்கள் பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளையும் ஏந்தி நின்றனர். அவற்றில் “தொழிலாளர்களுக்கான ஒப்பந்த முறை குத்தகையை ரத்து செய்”, தொழிலாளர்களின் பங்களிப்பை அரசாங்கம் மறந்து விட்டது”, தொழிலாளர்கள்தான் பெரும்பாலான வாக்காளர்கள்” மற்றும் “தொழிலாளர்கள் நீடூழி வாழ்க!” என்ற சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.

போலீசார் அவ்வளவாகக் காணப்படவில்லை. சீருடை அணிந்திருந்த ஓரிரு போலீசார் காணப்பட்டனர்.

பிஜேயில் மறியல் போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு எம்டியுசியின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹலிம் மன்சோர் தலைமையேற்றிருந்தார். நாடுதழுவிய அளவில் நடந்த மறியல் போராட்டத்தில் கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பங்கேற்றிருப்பர் என்று மதிப்பிடப்படுகிறது.

கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் நடந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான லிம் கிட் சியாங், வோங் ஹோ லெங், எம். குலசேகரன், முகமட் ஹத்தா ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.

அவர்களுடன் மலேசிய சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். அருட்செல்வனும் இருந்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.இராமகிருஷ்ணன், சைட் ஹுசேன் அலி, வில்லியம் வோங், பீ லோய் ஹியன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங், சுவாராம் தலைவர் கே. ஆறுமுகம், பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், பிகேஆர் பரப்புரைக்குழு தலைவர் லத்தீபா கோயா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேவான் நெகாரா (செனட்) அதன் கூட்டத்தை டிசம்பர் 7-22 வரையில் நடத்தும். அப்போது வேலைச் சட்டம் 1955 க்கு கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு எதிர்த்தும் வாக்களிப்போம் என்று செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சர் பதவி துறக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட்டில் இபிஎப் கட்டடத்திற்கு முன்பு கூடிய சுமார் 200 தொழிலாளர்கள் கூடினர். அவர்களுடன் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.

அங்கு குழுமியிருந்த தொழிலாளர்கள் “திருத்தங்களைத் திரும்பப் பெறுங்கள்”, “எம்டியுசி நீடூழி வாழ்க”, “அமைச்சரே பதவி விலகுங்கள்” (அமைச்சர் எஸ். சுப்ரமணியத்தை குறிப்பிட்டு) என்று முழக்கமிட்டவாறு இருந்தனர்.

அங்கு காணப்பட்ட சுமார் 10 பதாதைகளில் “தொழிலாளர்களின் உரிமைகளை அடகு வைக்காதீர்” மற்றும் “அமைச்சர் தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்” என்ற வாசகங்கள் பொரிக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்திற்கும் எம்டியுசிக்கும் இடையிலான வேலைச் சட்டத் திருத்தம் குறித்த பேச்சுவார்த்தை எந்த பலனையும் அளிக்காத நிலையில், அக்டோபர் 6 இல் நாடாளுமன்றம் வேலைச் சட்டத்திற்கான திருத்தங்களைச் சட்டமாக்கியது.

TAGS: