தெருக்குழந்தைகள் களைகள் அல்ல கவனிக்கப்பட்டால் பயனுள்ள பயிர்களே!

strett_child_001சர்வதேச தெருக்குழந்தைகள் தினம் உலகின் எதிர்கால ஒளிமயத்திற்கான அடிப்படையை திரும்பிப்பார்க்கும் ஒரு திட்டம்.

தெருக்குழந்தை தினம்

தெருக்குழந்தைகள் களைகள் அல்ல கவனிக்கப்பட்டால் பயனுள்ள பயிர்களே! இதை அறிந்தே சர்வதேச அமைப்பான ஐ.நா. ஜனவரி 31 ம் திகதியை தெருக்குழந்தைகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

பெருகிவரும் தெருக்குழந்தைகள்

இந்தியாவில் 1.10- 1.8 கோடி, அமெரிக்காவில் 15.5 லட்சம், பாகிஸ்தானிலும் எகிப்திலும் தலா 15 லட்சம், பிலிப்பைன்ஸில் 10 லட்சம் என உலகம் முழுவதும் 10 கோடி தெருக்குழந்தைகள் உள்ளன. இக்குழந்தைகள் அப்பிரிக்க நாடுகளில்தான் அதிகம்.

வறுமை, கல்வியின்மை, விபத்துகள், குற்றச்செயல் விளைவுகளால் இந்த அனாதைகள் உருவாகின்றனர், ஆதரவின்றி தெருக்குழந்தைகாளாகின்றனர்.

இந்த தெருக்குழந்தைகளை அருகிலிருக்கும் சமூகம் தெருக்குப்பையை போல உதாசீனப்படுத்திவிட்டு, அவரவர் குடும்ப கடைமைகளை கவனிக்க போய்விடுகிறது.

சமூகவிரோத ஊற்றுக்கண்

பசி, பட்டினி, கல்வியின்மை, அன்பின்மை, அரவணைப்பின்மை, இழிச்சொல், ஏமாற்றம், அவமானம், சமுதாய புறக்கணிப்பு என வெறுப்புகளே இதயத்தில் புரையோடிப்போன இவர்கள் சக்திவந்ததும் சமூகவிரோதத்தின் தூண்களாக மாறுவது யதார்த்தம்.

இளமையில் துரும்பாகவும் துச்சமாகவும் தூக்கிவீசப்பட்டவர்கள் எப்படியோ வளர்ந்து அந்த சமுதாயத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் சவாலாக மாறி அச்சுறுத்துகின்றனர்.

அரவணைக்கும் முன்னெச்சரிக்கை

தீவிரவாதி, சமூக விரோதி என உருவெடுக்கும் அவர்களை திருத்தவும் தண்டிக்கவும் அழிக்கவுமான பெரிய பொறுப்பும், பொருளாதார இழப்பும் அந்த நாட்டின் தலையில்தான் விழுகிறது.

அதனால், தெருக்குழந்தைகளுக்கு அவர்கள் இழந்த நல்வாழ்வை இப்போதே மீட்டுக்கொடுப்பது மனிதநேயம் மட்டுமல்ல, எதிர்காலத்தின் சமூகவிரோத செயல்களை தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே.

குடும்பத்தில் வளர்கிற ஒரு குழந்தைக்கும் சமுதாய புறக்கணிப்பில் வளரும் ஒரு தெருக்குழந்தைக்கும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நியாங்களில் நிச்சயம் வேறுபாடு இருக்கும். அதுதான் ஒரு நாட்டை அமைதி, வன்முறை என இரண்டாக பிரிக்கும்.

நல்லதே நாட்டிற்கு வல்லதாகும்

சர்வதேச அமைப்பின் தூண்டுதலாலும், ஒவ்வொரு நாடும் சமூகவிரோதத்தின் ’ஊற்றுக்கண்’ இதுவென தெரிந்ததாலும் இப்போது வாழ்க்கை வெளிச்சம் தெருக்குழந்தைகள் மீது விழுந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மனிதநேய அமைப்புகளும் தனியார் அறக்கட்டளைகளும் தொண்டு நிறுவனங்களும் மேலும் இதை ஊக்குவிப்பதால் ஆண்டுகள் செல்ல செல்ல தெருக்குழந்தைகள் வாழ்வு செழிக்கலாம். அவர்களும் சதனைகள் படைக்கலாம்.

சர்வதேசம் கொண்டாடும் தெருக்குழந்தைகள் தின எதிரொலி, சமூகவிரோத இருள் மீது விழுகிற கதிரொளி.

தெருக்குழந்தைகள் உள்ள நாடுகள் அனைத்தும் இதை கொண்டாட முன்வரவேண்டும்.

தெருக்குழந்தைகளுக்கு நாமும் உதவி பிறரையும் உதவ தூண்டுவோம் என இந்நன்னாளில் உறுதிமொழி ஏற்போம் தனிமனிதனாக, அமைப்பாக, அரசாக!

-மரு.சரவணன்

-http://world.lankasri.com