எம்டியுசி மறியல் போராட்டம்: பினாங்கில் 1,000 தொழிலாளர்கள் கூடினர்

வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர்களின் மறியல் போராட்டம் நேற்று பினாங்கு, பட்டர்வொர்த்தில் நடைபெற்றது. கனத்த மழையையும் இடியையும் பொருட்படுத்தாமல் 1,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போராட்ட மறியலை மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் (எம்டியுசி) பினாங்கு கிளை முன்னின்று நடத்தியது. வரிசை பிடித்து நின்ற தொழிலாளர்கள் தொழிலாளர்-ஆதரவு பதாதைகளை ஏந்தி நின்றனர். அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள் ஒலி எழுப்பி தங்களிடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

தொடக்கத்தில் கூட்டத்தினர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், 40 நிமிடங்கள் அடித்த கனமழைக்கிடையில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 1,000 க்கு கூடியது.

மறியல் போராட்டத்தில் இறங்கியிருந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பக்கத்தான் ரக்யாட் மற்றும் மலேசிய சோசலிசக் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

வேலைச் சட்டத் திருத்தங்கள் நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை விநியோகிக்கும் குத்தகையாளர்களிடமிருந்து பெறுவதற்கு வகை செய்வதால் அத்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பொறுப்பும் ஏற்கவில்லை என்று பினாங்கு எம்டியுசியின் செயலாளர் கே. வீரையா கூறினார்.

இதன் விளைவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் குத்தகையாளருக்கு வேலை செய்பவர்களாவர்.

இச்சட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையை நிரந்தரமாக்கும். இறுதியில், இத்தொழிலாளர்களைப் பயன்படுத்தும் முதலாளிகள் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று வீரையா மேலும் கூறினார்.

“ஒப்பந்தத் தொழிலாளர்களை மூன்றாம் தரப்பினர் கையாள்வர். மேலும், இத்திருத்தம் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க அனுமதிக்கிறது”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“குத்தகையாளரிடம் பணம் இல்லாமல் போய்விட்டால் அல்லது அவர் திடீரென்று தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டால், என்ன ஆகும்?”, என்று அவர் வினவினார்.

மேல் நடவடிக்க எடுக்கத் திட்டம் உண்டு

எம்டியுசி மாநில தலைவர் எஸ்.ரவீந்தரன் இத்திருத்தங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தொழிலாளர்கள் புரிந்துகொள்வதற்காக கூடுதல் நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“இத்திருத்தங்கள் நமது குழந்தைகளுடன் தொடங்கி இறுதியில் அனைத்து தலைமுறையினரையும் பாதிக்கும்”, என்று அவர் வருத்த முற்றார்.

மறியல் 90 நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், போலீசார் கூட்டத்தினரை கலைந்து செல்லும்படி கூறுமாறு எம்டியுசி தலைவர்களைக் கேட்டுக்கொண்டர். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மறியல் மாலை மணி 6.30 வரையில் தொடரும் என்றும் “எஜமானர்” (போலீசார்) மறியலை ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்திற்கு முன்பு முடிவுக்கு கொண்டு வருமாறு தொழிலாளர்களை நச்சரிக்கக்கூடாது என்று போலீசாரிடம் கூறப்பட்டதாக வீரையா தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மாலை மணி 6.30 க்கு கலைந்து செல்லும் வரையில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

TAGS: