மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய வீரர்கள் யார், யார்? பெயர்களை வெளியிட்ட பிரித்தானிய புலனாய்வு நிறுவனம்

russa_attac_001உக்ரையின் அருகே மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரஷ்ய ராணுவ வீரர்களின் பெயரை பிரித்தானியாவை சேர்ந்த புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்றுகொண்டிருந்த போயின் 777 ரக விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் உக்ரையின் அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் 298 பயணிகள் பலியாகினர். இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு படைகள் தான் என உக்ரையின் மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டின.

எனினும் இதனை மறுத்துவந்த ரஷ்யா, விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரையின் தான் என்று தொடர்ந்து கூறிவந்தது.

இதனிடைய ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக்(Buk) ரக ஏவுகணை மூலம் விமானம் தாக்கப்பட்டதாக நெதர்லாந்து ஆதாரத்துடன் தெரிவித்தது.

இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த புலனாய்வு நிறுவனமான பில்லிங்காட் (Bellingcat) விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய வீரர்களின் பெயர்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

சுமார் 115 பக்கங்கள் கொண்ட அந்த தொகுப்பில், விமான ஏவுகணை எதிர்ப்பு பிரிக்கேட் 53வது பிரிவின் 2வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குர்ஷ் பகுதியை தலைமையிடமாக கொண்ட அப்படை வீரர்கள் ரஷ்யாவில் இருந்து கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விரர்களின் முதல் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த தாக்குதலுக்கு முக்கிய பங்காற்றியவர் செர்கெ முச்கயெவ் என்பவர் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது 2வது பட்டாலியனின் கொமண்டராக இருந்தவர் திமித்ரி டி. மேலும் ராணுவ ஆயுதங்களை உக்ரையின் எல்லைக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதில் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்றும் அந்த தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நெதர்லாந்து புலனாய்வு துறைக்கு தற்போது இந்த ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆதாரங்கள்  தொடர்பாக ரஷ்யா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com