இன்று பிற்பகல் லிம்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

“அதிருப்தி கொண்ட” பல்வேறு தரப்பினர், இன்று பிற்பகல் 2.30க்கு பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள கொம்டாரில்  முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டம்  நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அந்த உத்தேச ஆர்ப்பாட்டம் லிம்மைக் கடுமையாக எதிர்ப்பவரான சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவர் முகம்மட் கனி அப்துல் ஜிமான் தலைமையில் நடைபெறுமெனத் தெரிகிறது. 

கொம்டார் வியாபாரிகள் சங்க உதவித் தலைவருமான கனி, பக்காத்தான் ரக்யாட் மாநில அரசுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார். ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை பெரும்பாலும் 300க்கும் குறைவாக இருக்கும். சில நேரங்களில் 10, 20 பேரை வைத்துக்கொண்டும்கூட அவர் ஆர்ப்பாட்டம் செய்ததுண்டு.

ஆனால், இன்று பல இனத்தவரையும் சேர்ந்த 2,000பேர் கலந்துகொள்வார்கள் என்று கனி எதிர்பார்க்கிறார். எல்லா இனத்தவர்களும் சேர்ந்து நடத்தும் ஆர்ப்பாட்டமாக அது இருக்குமாம்.

“(அவர்கள்) லிம் குவான் எங்மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்த வாகனங்களில்  கொம்டாருக்கு ஊர்வலமாக வந்துசேர்வார்கள்”, என்று பகாசா மலேசியாவில் வலம் வரும் குறுஞ்செய்தி ஒன்று கூறுகிறது.

தோல்பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபாரி கனி.  கொம்டாரில்  வியாபாரிகள் கடைகள் வைத்திருந்த மூன்றாம் மாடியை மாநில அரசு புதுப்பித்ததை அடுத்து கனிக்கு மாநில அரசுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

அதிலிருந்து அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கமாகி விட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெர்சே 2.0க்கு ஆதரவு தெரிவித்த லிம்மை எதிர்த்து அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.சுமார் 300 பேர் அதில் கலந்துகொண்டார்கள். அவர்களில் பலர் பினாங்கு பாலம்வரை சென்று அங்கு முற்றுகை இட்டனர். இதனால் அங்கு 30 நிமிடத்துக்கு போக்குவரத்து நிலைகுத்தியது.

TAGS: