பாரீஸ் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் பகீர் வாக்குமூலம்: வெளியான தகவல்கள்

paris_attack_001பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஒருவன் பொலிசாரிடம் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளான்.

பாரீஸில் 3 முக்கிய இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூரச்செயலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளில் சிலர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் Salah Abdeslam(26) என்ற தீவிரவாதி பொலிசாரிடம் சிக்காமல் பெல்ஜியம் நாட்டிற்கு தப்பியுள்ளான்.

கடந்த 4 மாதங்களாக பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, நேற்று முன் தினம் பொலிசார் அந்த தீவிரவாதியை கைது செய்தனர்.

தற்போது பெல்ஜியத்தில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சில தினங்களுக்கு பிறகு பிரான்ஸ் குடிமகனான அந்த தீவிரவாதியை பிரான்ஸ் நாட்டிற்கு நாடு கடத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Francois Molins என்ற விசாரணை அதிகாரி பேசியபோது, ‘பாரீஸில் தாக்குதல் நடத்தியதற்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

’தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி தன்னுடைய உடல் முழுவதும் குண்டுகளை சுற்றிக்கொண்டு தன்னை தானே வெடித்து தாக்குதலை நடத்தும் திட்டத்தில் வந்துள்ளார்.

ஆனால், குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துக்கொள்வதற்கு அச்சப்பட்டு அதனை தவிர்த்தாரா அல்லது மற்ற காரணமா? என விசாரணை நடைபெற்று வருதாக Francois Molins தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாரீஸ் தாக்குதலுக்கு பின்னணியாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தாக்குதலில் பலியான நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com