லிம்முக்கு எதிராகப் போராட்டமா?

இன்று பிற்பகல் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக “அதிருப்தி அடைந்துள்ள” சில கூட்டத்தினர் பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் இருக்கும் கொம்டாரில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர் – ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அப்பெரிய ஆர்ப்பாட்டத்தை தோல் பை வியாபாரியும் சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவருமான கனி முன்னின்று நடத்த விருந்தார். ஆனால், அவரின் கவனம் செக்சுவலிட்டி மெர்தேக்கா மீது திரும்பி விட்டது.

ஆர்ப்பாட்டம் நடக்க விருந்த இடத்தில் கூடியிருந்த செய்தியாளர்கள் கனி செக்சுவாலிட்டி மெர்தேக்கா பேரணிக்குச் சென்று விட்டதால் அவ்விடத்தை விட்டு பிற்பகல் 3.00 க்கு வெளியேறினர்.

செக்சுவாலிட்டி மெர்தேக்காவுக்கு எதிராக கம்புங் ராவாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் சுமார் 70 பேர் கூடியிருந்து ஒரு 30 நிமிடங்களுக்கு அமைதியாகப் போராட்டம் நடத்தினர். போலீசாரும் அங்கு அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் – பெர்காசா, சுவாரா அனாக்-அனாக் மலேசியா, பாஜிம் மற்றும் பாடாய் உறுப்பினர்கள் – பதாதைகளையும் சுவரொட்டிகளையும் ஏந்திக்கொண்டு செக்சுவாலிட்டிக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

செக்சுவாலிட்டி மெர்தேக்கா விழாவில் பல வழக்குரைஞர்கள் கலந்து கொண்டுள்ளதால், வழக்குரைஞர் மன்றத்தின் சின்னம் பொரித்த சுவரொட்டியை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசனையும் அவர்கள் தாக்கிப் பேசினர்.

“இம்மாதிரியான முறைகெட்ட நடத்தையை அனுமதிக்கக்கூடாது. அது அனைத்து இனங்களுக்கும் சமயங்களுக்கும் எதிரானது”, என்று அறிவுரை வழங்கினார் கனி.

“ஆணை ஆணும் பெண்ணை பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண் பன்றிகள் கூட ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்ள முடியாது”, என்று அவர் தமது அறிவுரையைத் தொடர்ந்தார்.

“செக்சுவாலிட்டி மெர்டேக்கா நமது குழந்தைகளைக் கெடுத்து விடும்”, என்று கூறி அவர் உரையை முடித்தார்.

TAGS: