சீனாவின் ராணுவத் திட்டங்கள் குறித்து ஆசிய நாடுகள் கவலை

சீனாவின் ராணுவத் திட்டங்கள் குறித்து ஆசிய நாடுகள் கவலை கொண்டிருக்கின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறினார்.

பாதுகாப்புப் படையினர் விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

சீனாவின் சில செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. ஆசியப் பிராந்தியத்திலும் அந்தச் செயல்பாடுகள் கவலை ஏற்படுத்துவதாக உள்ளன.

இதையடுத்து, ஆசிய நாடுகள் உதவி கோரி அமெரிக்காவை நாடுகின்றன. சீனாவின் நடவடிக்கைகளால், நமது நீண்ட கால நட்பு நாடான பிலிப்பின்ஸ், புதிய நட்பு நாடான வியத்நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்தைப் பொருத்தவரையில், சீனாவின் செயல்பாடு சர்வதேச சட்ட திட்டங்களுக்கு சவால் விடும் விதமாக உள்ளது.

நாடுகளிடையே எழும் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் சீனா முனைப்பு காட்டுவதில்லை.

அண்மையில் நான் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அங்கும் சீனாவின் நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தனர்.

அமெரிக்கா – ஆஸ்திரேலியா-ஜப்பான் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஜப்பான்-அமெரிக்கா-இந்தியா அமைச்சர்கள் அளவிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவை எந்த நாட்டையும் குறிப்பாக மனதில் வைத்து இயற்றப்படவில்லை. அந்தப் பிராந்தியங்களில் நல்லுறவு, ஒத்துழைப்பு ஏற்படுத்தவே இந்த ஒப்பந்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

தெற்கு சீனக் கடல் பகுதியில் சீனாவுடன் மோத அமெரிக்கா தயாராக இல்லை. மோதல் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் முனைப்பாக உள்ளது.
சென்ற 7 ஆண்டுகளாக நாம் உருவாக்கியிருக்கும் நட்புறவுக்கு பங்கம் வரும் வகையில் நடவடிக்கைகள் இருந்தால், சர்வேதச சட்டங்கள் மீறப்பட்டால், அவற்றைப் பாதுகாக்கும் விதமாக அமெரிக்கா நடந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

கடந்த 20 ஆண்டுகளாக சீனாவின் ராணுவத் திட்டங்கள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் கூடுதல் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இவை அண்டை நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறினார்.

-http://www.dinamani.com