’’ஜேர்மனிக்குள் இஸ்லாமியர்கள் நுழையக்கூடாது’’ போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சி

germany_sam_001அகதிகளுக்கு எதிரான ஜேர்மனியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான வலது சாரி கட்சி அந்நாட்டிற்குள் இஸ்லாமியர்களை நுழைவதற்கு அனுமதிக்க மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் கடந்த ஆண்டு வரை சுமார் 40 லட்சம் இஸ்லாமியர்கள் குடியேறியுள்ளனர். அதாவது, ஜேர்மனியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 5 சதவிகிதம் இஸ்லாமியர்கள் ஆவர்.

கடந்தாண்டுகளில் துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களே அதிகளவில் ஜேர்மனியில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் Alternative for Germany(AfD) என்ற கட்சியான ஒரு புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ‘இஸ்லாமியம் என்பது ஜேர்மனியின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு ஏற்றது அல்ல. இஸ்லாமியர்கள் நமது நாட்டு பழக்கவழக்கம் மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு பொருத்தமானவர்களாக இருக்க மாட்டார்கள்.

இஸ்லாமியர்களின் மதநம்பிக்கை வேறு, நமது மதநம்பிக்கை வேறு. எனவே, ஜேர்மனிக்குள் இஸ்லாமியர்கள் நுழைவதை தடை செய்ய வேண்டும்.

எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அகதிகளுக்கு ஆதாரவாக செயல்பட்டு வரும் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலை வீழ்த்துவோம்’ என அக்கட்சியின் உறுப்பினரான Hans-Thomas Tillschneider என்பவர் தெரிவித்துள்ளார்.

அகதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் இக்கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் கூட ஜேர்மனியின் 16 மாகாணங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com