பாஸ் கோலா கங்சார் இடைத் தேர்தலில் போட்டியிட்டு சுங்கை புசாரை அமானாவிடம் விட்டு விட வேண்டும் என்ற பக்கத்தான் பரிந்துரையை அந்த இஸ்லாமியக் கட்சி ஏற்க வேண்டும் என பேராக் டிஏபி வலியுறுத்தியுள்ளது.
இது அவ்விரண்டு தொகுதிகளிலும் அம்னோவுடன் நேரடிப் போட்டியை உறுதிப்படுத்தும் என பேராக் டிஏபி தலைவர் ங்கா கொர் மிங் கூறினார்.
“பாஸ் அம்னோவைத் தோற்கடிப்பதை உண்மையிலேயே விரும்புமானால் இந்த ஏற்பாட்டை மனமுவந்து ஏற்க வேண்டும்”, என்றாரவர்.
அவ்விரண்டு தொகுதிகளும் பாஸ் பாரம்பரியமாக போட்டியிட்டு வந்துள்ள இடங்களாகும். ஆனால், அது இப்போது பக்கத்தான் ஹராபான் கூட்டணியில் இல்லை என்பதால் அக்கூட்டணி சொந்த வேட்பாளர்களை அங்குக் களமிறக்க எண்ணுகிறது.
பாஸ் மற்ற கட்சிகள் அத்தொகுதிகளை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் அம்னோவை எதிர்த்து தான் மட்டுமே களமிறங்க வேண்டும் என்றும் விரும்புகிறது.
பாஸ், பேச்சுகளுக்கு ஒத்துவரவில்லை என்றால் மும்முனை போட்டி உருவாகும் என்றும் அது அம்னோவுக்குத்தான் நன்மையாக முடியும் என்றும் ங்கா தெரிவித்தார்.
அவ்விரு இடைத் தேர்தல்களும் பிரதமரின் 1எம்டிபி மற்றும் நன்கொடை ஊழல்கள்மீதான ஒரு கருத்துக் கணிப்பாகவும் அமையும் என்றாரவர்.