வான் எல்லைக்குள் நுழைந்து முல்லா அக்தர் மன்சூர் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்

mullah aktharதலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூரைக் கொல்வதற்காக அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது குறித்து, தங்கள் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஹேலை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து வெளிவிவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் தாரிக் ஃபதேமி கூறியதாவது:
அமெரிக்க ஆளில்லா விமானம் பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நிகழ்த்தியுள்ளது, எங்கள் நாட்டின் இறையாண்மையைக் குலைக்கும் செயலாகும்.

மேலும், உறுப்பு நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும் என்ற ஐ.நா. பிரகடனத்துக்கு இது எதிரானதாகும்.
ஆப்கன் அரசும், தலிபான்களும் பங்கேற்கும் நான்கு முனைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இந்தத் தாக்குதல் நடவடிக்கை குந்தகம் விளைவிக்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டுமானால், இதுபோன்ற அத்துமீறல்களை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றார் அவர்.

ஆப்கன் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டார்.

முல்லா அக்தர் மன்சூர் பயணம் செய்த வாகனத்தில் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில் அவருடன் இருந்த தலிபான் தளபதி ஒருவரும் கொல்லப்பட்டார்.
தலிபான் பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய முல்லா முகமது உமர் கடந்த 2013-ஆம் ஆண்டு மரணமடைந்ததாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அந்த அமைப்புக்கு முல்லா அக்தர் மன்சூர் தலைமையேற்றார்.

“பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் தாக்குவோம்’

வாஷிங்டன், மே 24: பாகிஸ்தானின் இறையாண்மைக்கு மதிப்பளித்தாலும், பயங்கரவாதிகள் அந்த நாட்டில் ஒளிந்திருந்தால் அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:

நாங்கள் பாகிஸ்தான் எல்லைகளை மதிக்கிறோம். என்றாலும், ஏற்கெனவே கூறியபடி அமெரிக்காவுக்கும், ஆப்கன் மக்களுக்கும் எதிரான தாக்குதல் நிகழ்த்துபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிப் பிடித்து அழிப்போம் என்றார் அவர்.

-http://www.dinamani.com