குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்ட எகிப்திய விமானம்: தடயவியல் நிபுணர்கள் தகவல்

egypt planeகடந்த 7 நாட்களுக்கு முன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான எகிப்து பயணிகள் விமானம் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு 18ம் திகதி ஈஜிப்ட்ஏர் விமானம் (ஏர் பஸ் ஏ320 ரகம்) புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் 56 பயணிகள், 7 சிப்பந்திகள், 3 பாதுகாவலர்கள் என 66 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் எகிப்து வான் பிரதேசத்தில் நுழைந்து, 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது (அதிகாலை 2.45 மணிக்கு) திடீரென ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

எகிப்தின் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 66 பேரும் பலியாகினர். விமானம் நடுவானில் வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடலில் விழுந்த எகிப்து பயணிகள் விமானம் குண்டுவெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளது என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இதுவரை 80 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. எந்தவொரு உடலும் முழுமையாக மீட்கப்படவில்லை.

மேலும், விமானத்தின் பாகங்களும் பல துண்டுகளாக உடைந்துள்ளன. எனவே குண்டுவெடிப்பு மூலமே விமானம் தகர்க்கப்பட்டுள்ளது என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் கருப்பு பெட்டிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவை கிடைத்த பிறகே உண்மை தெரியவரும் என்று எகிப்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

-http://news.lankasri.com