குப்பை என ஒதுக்கிய கிரீடத்தின் மதிப்பு ரூ.67 லட்சம்: வியப்பில் உறைந்த உரிமையாளர்

crownபிரித்தானியாவில் குப்பை என ஒதுக்கி வைத்திருந்த பண்டைய கிரீடம் ஒன்றிற்கு 67 லட்ச ரூபாய் மதிப்பு இருப்பதை அறிந்த உரிமையாளர் வியப்பில் உறைந்துள்ளார்.

பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் குடியிருந்து வரும் முதியவர் ஒருவரை அரிய வகை பொருட்களை ஏலத்தில் விடும் நிறுவனத்தில் இருந்து சிலர் வந்து சந்தித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கை அறிந்த அந்த முதியவர் தமது குடும்பத்தில் பரம்பரையாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களை அவர்களுக்கு காட்டியுள்ளார்.

இதனிடையே பல ஆண்டுகளாக ஒதுக்கியே வைத்திருக்கும் ஒரு அட்டை பெட்டியை அந்த முதியவர் எடுத்து அதில் இருப்பவையை வெளியே கொட்டியுள்ளார்.

அப்போது அந்த அட்டை பெட்டியில் தங்கத்தாலான கிரீடம் ஒன்றும் இருந்துள்ளது. அந்த முதியவருக்கு அந்த கிரீடம் குறித்து மேலதிக தகவல் எதுவும் தெரியாததால் அதை அப்படியே குப்பை என ஒதுக்கி வைத்திருந்துள்ளார்.

கிரீடத்தை பார்த்த ஏலம் விடும் நபர்களுக்கு, அந்த கிரீடத்தின் தனித்தன்மையும் வடிவமும் வித்தியாசத்தை உணர்த்தியுள்ளது.

உடனடியாக அவர்கள் அந்த கிரீடத்தின் மதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் விசாரித்துள்ளனர். அந்த நிபுணர்கள் தெரிவித்த தகவல்கள் கிரீடத்தின் உரிமையாளரை வியப்பில் உறைய வைத்துள்ளது.

அந்த கிரீடம் சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானது எனவும் சுத்தமான தங்கத்தால் பொற்கொல்லர்களால் கைகளால் உருவாக்கப்பட்ட கிரேக்க கிரீடம் இதுவெனவும், பண்டைய காலகட்டத்தில் வெற்றிவாகை சூடும் கலை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும் பொக்கிஷம் இது எனவும், இந்த கிரீடத்தின் தற்போதைய மதிப்பு குறைந்தது 67 லட்ச ரூபாய் எனவும் அந்த முதியவரிடம் தெரிவித்துள்ளனர்.

முதியவருக்கு இந்த கிரீடம் எப்போது அவர்களது குடும்பத்தினரால் வாங்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் 1940களில் இவரது குடும்பத்தினர் எவரேனும் இதை வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு இதேப்போன்ற கிரீடம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டதில் அந்த உரிமையாளருக்கு 1.96 கோடி ரூபாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com