இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளால் 2 லட்சம் பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது முதன் முதலாக ஜனாதிபதி ஒபாமா ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் ராணுவம் பேர்ல் துறைமுகத்தில் பயங்கர தாக்குதலை நடத்தியதால் அமெரிக்க கடும் கோபம் கொண்டது.
இதனை தொடர்ந்து, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின் மத்தியில் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். இதன் பிறகு, நாகசாகி என்ற நகரில் இரண்டாவது அணுகுண்டை வீசியதில் சுமார் 74,000 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் கொடூரமான தாக்குதலை நடத்திய அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என இன்றளவும் ஜப்பான் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒபாமா ஜப்பான் நாட்டிற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜப்பான் நாட்டிற்கு சென்றடைந்த ஒபாமாவை அந்நாட்டு பிரதமரான ஷின்ஷோ அபே வரவேற்றார். பின்னர், ஜனாதிபதி ஒபாமா மற்றும் ஷின்ஷோ அபே இருவரும் ஹிரோஷிமா நினைவிடத்தில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதலில் தப்பிய 79 வயதான முதியவர் ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், அவரை ஒபாமா கட்டித்தழுவி தனது இரங்கல்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்விற்கு பின்னர் ஒபாமா ஆற்றிய உரையில், ‘ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் நினைவு என்றும் அழியக்கூடாது. இந்த உயிரிழப்புகள் தான் அணுகுண்டு பயன்படுத்துவது எவ்வளவு கொடூரமானது என்பதை உலகிற்கு காட்டியுள்ளது.
இதனால், உலக நாடுகளும் தற்போது மாறியுள்ளன. விண்ணில் இருந்து மரணம்(அணுகுண்டு) இந்த பூமியில் விழுந்தது. இந்த மரணம் தான் தற்போது நம் மக்களின் மனதில் மனிதத்தை விதைத்துள்ளது’ என உருக்கமாக பேசியுள்ளார்.
முன்னதாக, ஜப்பானில் அணுகுண்டுகளை வீசி உயிரிழப்புகளை ஏற்படுத்தியதை கண்டிக்கும் வகையில், ஜனாதிபதி ஒபாமாவிற்கு அந்நாட்டில் உள்ள சில அமைப்பினர் எதிர்ப்புகளை காட்டியது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com