முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து தலீபான் தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டார். முல்லா உமர் மகனுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முல்லா அக்தர் மன்சூர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக திகழ்ந்து வந்தவர் முல்லா உமர். அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் புதிய தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி முல்லா அக்தர் மன்சூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வழிநடத்தி வந்தார். இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களுடன், ஆப்கானிஸ்தான் படை வீரர்களும், அமெரிக்க கூட்டுப்படை வீரர்களும் ஏராளமாக பலியாகினர். மேலும் ஆப்கானிஸ்தான் அரசு, தலீபான்களுடன் சமாதான பேச்சு நடத்துவதற்கும் அவர் தடையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இருப்பதை அமெரிக்கா துப்பறிந்து, அவரை கொல்ல உத்தரவிட்டது. 21-ந் தேதி அவர் தனது சகா ஒருவருடன் காரில் பயணம் செய்தபோது, அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் சிக்கி பலி ஆனார். அதை தலீபான் இயக்கம், இப்போதுதான் முதன்முதலாக ஒப்புக்கொண்டுள்ளது.
புதிய தலைவர்
இதையடுத்து தலீபான் இயக்கத்தின் புதிய தலைவராக மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தலீபான் இயக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இஸ்லாமிய அமீரகத்தின் (தலீபான்) புதிய தலைவராக மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கவுன்சிலின் ஒருமித்த உடன்பாட்டின்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து பணியாற்ற உறுதி கொண்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
தலீபான் இயக்கத்தின் தலைவராக திகழ்ந்த முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாக்கூப், துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போதைய துணைத்தலைவர் சிராஜூதீன் ஹக்கானியுடன் இணைந்து பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அகுந்த் ஜாதா?
தலீபான் இயக்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா, 45 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர். மதத்தலைவர். தலீபான் இயக்கத்தினருக்கு கட்டளைகள் பிறப்பித்து வந்தவர். அவர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை ஆப்கானிஸ்தானில்தான் கழித்து வந்துள்ளார். ஆனாலும் பாகிஸ்தானில் உள்ள ‘குவெட்டா சுரா’ என்னும் ஆப்கானிஸ்தான் தலீபான் தளகர்த்தர்களுடன் நெருங்கிய உறவினை கொண்டிருந்தவர் என சொல்லப்படுகிறது.
தலீபான் இயக்கத்தின் தலைவராக இவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இவர் தலீபான் இயக்கம், ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த துணை நிற்பாரா அல்லது தனது முந்தைய தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பாதையில் பயணம் செய்து, ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர வழி நடத்துவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.
-http://www.athirvu.com