பிரித்தானிய நாட்டில் கணிணியில் ’ஹேம்’ விளையாடிய 12 வயது சிறுவன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரில் Karnel Haughton என்ற 12 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான்.
படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியான இந்த சிறுவன் இணையத்தளத்தில் வெளியாகும் புதிய புதிய விளையாட்டுகளை விளையாடுவது இவனது முக்கிய பொழுபோக்கு.
இந்நிலையில், இணையத்தை கலக்கி வரும் ‘Choking Game’(மூச்சை இழுத்து பிடிக்கும் விளையாட்டு) என்ற விளையாட்டு பற்றி தனது நண்பர்கள் மூலம் அறிந்துள்ளான்.
இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் அதிக நேரம் மூச்சு விடாமல் இழுத்து பிடித்து அதனை வீடியோவாக இணையத்தில் வெளியிட வேண்டும்.
விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் கடந்த புதன்கிழமை அன்று அவனது வீட்டில் உள்ள கணிணியில் அந்த ஆபத்தான விளையாட்டை விளையாடியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த அறைக்கு அவனது தாயார் சென்றபோது, சிறுவன் சுயநினைவின்றி தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சிறுவனை மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது, அவனது மூளைக்கு சுவாசம் செல்லாமல் தடையானதால் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், சிறுவன் மட்டும் தனியாக விளையாடினானா? அல்லது அவனது வீட்டில் மற்றவர்களும் சேர்ந்து விளையாடினார்களா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து பலியான சிறுவனின் குடும்ப நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சிறுவர்கள் வீட்டில் என்ன செய்கிறார்கள்? எந்தெந்த விளையாட்டுகளை கணிணியில் விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூச்சை இழுத்து பிடித்து விளையாடும் இந்த விளையாட்டால் கடந்த பெப்ரவரி மாதம் 14 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com