கடலையே அழிக்கும் சுனாமி? ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

pic01ஸ்பெயின் கடற்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 75 ஆயிரம் எடை கொண்ட திமிங்கிலம் உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது.

கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அதை மீண்டும் கடலுக்குள் அனுப்ப ஒரு கால்வாயே வெட்டி வழிசெய்தனர்.

ஆனாலும், திமிங்கிலம் செல்லவில்லை. மீண்டும் கடலுக்குள் வழியனுப்ப, நான் கரைக்கு சுற்றுலாவா வந்தேன்.

உடல் பலவீனத்தால் அலையை எதிர்க்க முடியாமல்தானே கரை ஒதுக்கப்பட்டேன் என்ற மௌனத்தோடு மடிந்தது.

பிறகு, அதை அறுத்தபோதுதான் 50 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும் கையுறைகளும் அதன் பொல்லாத விதியாக வயிற்றுக்குள் இருந்தது தெரிந்தது.

ஒன்றல்ல, இதுபோல ஆயிரமாயிரம் கடல் சீரழிவுகள் நடந்து வருகிறது, அதை நாமும் செய்திகளாக அறிந்தே வருகிறோம்.

கடலோர காற்று

இனிமையான கடற்காற்று அது கடலுக்கே வேட்டு வைத்துவிடுகிறது. காற்று வாங்க அழகான கடற்கரைக்கு குடும்பமாகவும் நண்பர்களாகவும் செல்கிறோம்.

அங்கு தின்பண்ட பாலிதீன் பைகளை குற்ற உணர்வே இல்லாமல் வீசிவிட்டு வருகிறோம். அதனால், கடல் உயிர்களையே காவு வாங்குகிறோம்.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சிலையை கடலில் கரைப்பது விழாவின் நிறைவு.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சிலைகள் கடலில் கரைக்கப்படுகிறது. அதில் பிளாஸ்டிக் பொருள்கள் இல்லை, கரையக்கூடியதுதான் என சமாதானங்கள் சொன்னாலும் ஒவ்வொரு சிலையையும் ஆராய முடியாது.

மேலும், அதில் உள்ள வர்ணங்கள் உட்பட யாவுமே கடலுக்கு ஒவ்வாமையான பொருள்களாகவே இருக்கக் கூடும். அது கடலின் இயற்கைத்தன்மையை கெடுக்கக்கூடும்.

விநாயகர் சதூர்த்தியை எல்லா நாட்டு மக்களும் கொண்டாடினால் கடல் என்னாவது, நல்ல வேளையாக அது நடக்கவில்லை.

கடல் அறுவடை

கோடிக்கணக்கில் மீன்களை பிடித்தாலும் உணவு சுழற்சி என்பதால் அதில் விபரீதமில்லை. ஆனால், கடலுக்குள் செல்பவர்கள் விழிப்புணர்வு இல்லாமல் விட்டுவரும் மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருள்களால் மீன்கள் விழுங்கி மடிவதும் கடலில் மக்காத குப்பைகள் அதிகரிப்பதும் இயற்கை விபரீதமே!

கடற்கரை கிராமங்கள் அனைத்திலும் அரசும் சமூக ஆர்வலர்களும் கடலில் குப்பைகள் விடாதிருக்க விழுப்புணர்வை ஏற்படுத்தலாம் அதற்கு இந்த உலக சமுத்திர தினத்தை பயன்படுத்தலாம்.

சிறு தவறா?

இந்த தவறுகளை செய்பவர்கள் நாம் ஒரு பாலிதீன் பையை தானே விடுகிறோம், இதுவா இத்தனை பெரிய கடல் வளத்தை கெடுக்கப்போகிறது என சாதாரணமாக நினைக்கிறார்கள்.

ஆனால், சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு 1.86 லட்சம் கிலோ என்றால் நம்புவீர்களா? அதுவும் பருமனளவில் பார்த்தால் ஒரு கிலோவுக்கே 500 பாலித்தீன் பைகள் அடங்கும்.

மேலும், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் பொதுமக்களால் கொட்டப்படும் கழிவுப் பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 வரை ஆகும், உலகம் முழுதும் எவ்வளவாக இருக்கும்.

நவீன “Use and Throw’ நாகரீகம் வந்து நகரங்களை நரகங்களாக்குகிறது. கால் மணிநேர பயன்பாட்டிற்காக 100 முதல் 1000 ஆண்டுகள் வரை மக்காத பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருள்களை பயன்படுத்துகிறோம்.

இந்த கழிவுகள் எல்லாம் எப்படியும் கடைசியாக கடலுக்குள்தான் ஒதுக்கப்படும். கடலில் மிதக்கும் 90 சதவீத பொருள்கள் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஒரு பெரிய தீவு போல இந்த பிளாஸ்டிக் பொருள்கள் ஒதுங்கியிருப்பதும் அறியப்பட்டுள்ளது. மேலும் ஆராயப்பட்டால் அதுபோல கடலின் பல இடங்களில் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

நிலத்தில் ஆடு, மாடுகள் இதை சாப்பிட்டு இறக்கின்றன. கடலில் மீன்கள் விழுங்கி மடிகின்றன. அந்த மீன்களை சாப்பிடும் மனிதனும் நோயில் விழுகிறான்.

மேலும், தொழிற்சாலை கழிவுகள், எண்ணெய் கப்பல்கள் மூழ்குதல் போன்ற மனித நடவடிக்கைகளாலும் கடலின் இயல்பு முறிகிறது.

கடவுளின் மர்மம் கடல்

நாம் நேரடியாக பயன்படுத்த முடியாத உப்பு நீரைக் கொண்டது. நாம் வாழும் கண்டங்களிலிருந்து ஒதுங்கியிருப்பது கடல். ஆனால், அதுதான் மகத்தான, மர்மமான, எவற்றாலும் ஈடுசெய்ய முடியாத அளவில், இந்த பூமியின் உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குகிறது.

பூகோள உயிர்ப்பு, கடலும் கண்டங்களும் ஒன்றை ஒன்று சார்ந்த இயற்கை சுழற்சியிலே இருக்கிறது. கடலே ஒரு உலகம். கண்டங்களைவிடவும் பேரளவிலான இன்னும் ஆராயப்படாத ஆழ்கடல் உயிர்களுக்கும் தாயகம்.

கடல் நன்னீராக இருந்திருந்தால் தண்ணீர் பஞ்சத்துக்கு பயன்படுமே என நாம் நினைக்கலாம். அது உப்பாக இருப்பதற்கு அறிவியல் காரணம் கூறலாம் ஆனால், அதன் நோக்கத்தின் மர்மத்தை ஆராயவே முடியாது.

கடலின் உவர் நிலை கூட பூமியில் உள்ள இயற்கை சுழற்சிக்கு ஏதோ ஒரு விதத்தில் ஏதுவானதாகவே இருக்கும்.

-http://news.lankasri.com