ஒருவனுடைய அழிவில் தான் இன்னொருவனுடைய வாழ்வு இருக்கிறது என்ற விபரீத நோக்கத்தை ஒரு தனிமனிதன் கையிலெடுப்பதே கலகம். ஒரு நாடே அப்படி நடந்தால் என்னவாகும்? கதிகலங்கும்.
அந்த அவதியில் தான் அகதிகள் உலகில் உருவாகிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாடுகளோடும் சுமூக உறவை நிலைநாட்டும் அதிகார மையமாக இருப்பது ஒரு அரசு. அது நேர்மையில் தவறும் போது நிலைமையே தலைகீழாகி விடுகிறது.
இலங்கை
இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக தமிழர்கள் அகதிகளாக இந்தியா, அமெரிக்கா, கனடா, சுவிஸ், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வந்தனர். அதற்கு காரணம் அரசாங்கமே அங்கு இறையாண்மையை மதிக்காதது தான்.
இது உலகம் அறிந்த உண்மை, அந்த இனப்பிரச்சினையில் ஆதிக்க மனம், அதிகார ஆட்சி, நோக்கத்தை நிறைவேற்றும் பிடிவாதம் எல்லாமே ஒரே பக்கமே இருந்தது.
தமிழர்களை அங்கு தீவிரவாதிகள் போல சித்தரித்தது உலக அரங்கில் சிங்களர்களுக்கான தற்காப்பு வாதமே. அது எந்த சிங்களரும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லாததிலிருந்தே சர்வதேச அமைப்புகள் உணர்ந்துகொள்ள முடியும்.
அங்கு பெரும்பான்மை இனமான சிங்கள அரசு, தமிழர்களுக்கும் தேவையான மனித உரிமைகளை வழங்காமல் இனபேதம் பார்த்து வம்பு செய்ததன் விளைவே அது.

ஈராக்
சதாம் உசேனின் ஆட்சியை அகற்ற அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் 2003 ல் ஈராக் மீது போர் தொடுத்தன.
அதற்கு நோக்கம் எண்ணெய் வளம் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா அதிக்கம் செலுத்த விரும்பியது தான்.
ஆனாலும், ஈராக் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி. கதாநாயகன் போல உலகிற்கு காட்டிக்கொண்ட அமெரிக்கா, போரில் வெற்றி பெற்றும் ஈராக்கில் அணு அயுதம் இருப்பதை கண்டுபிடித்து உலகுக்கு நிரூபிக்கவில்லை.
அந்த போரினால், ஈராக்கில் உள்ள ஷியா, சன்னி மதப்பிரிவினர், குர்திஷ் மற்றும் சிறுபான்மையினரிடையே அமைதி குலைந்தது. மேலும், ஈராக்கில் அரசாங்கமில்லாமல் அமெரிக்க கூட்டுப்படைகள் வழிநடத்தும் ஒரு நிர்வாகமே உருவானது.
போரின் காரணமாக 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக எல்லையோர நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
சிரியாவில் மட்டுமே 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சென்றனர். அவர்களுக்கு சிரியா தேவையான வசதிகளை செய்து கொடுத்தது.
இந்த நிலையில் ஈராக்கில் உள்நாட்டுப் போரும் நடந்ததால் இன்னும் பல்லாயிரக் கணக்கில் சிறியாவிற்கு செல்லும் அகதிகள் கூடினர்.
இதனால், துருக்கி, சிரியா, ஜோர்டான், சவூதி அரேபியா, குவைத், ஈரான் ஆகிய ஈராக்கின் எல்லையோர நாடுகளிலும் அச்சம் பரவியது, அமைதி சரிந்தது.

லிபியா
அதிக எண்ணெய் வளத்தை கொண்டிருந்த லிபியாவிலும் கடாபி அமெரிக்க ஆதிக்கத்துக்கு தடையாக இருந்தார். அதனால், ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியுடன் ராணுவ நடவடிக்கை மூலம் 2011 ல் கடாபியின் ஆட்சியும் அகற்றப்பட்டது.
ஆப்பிரிக்கா
லிபியாவில் அரசு இல்லாத சூழலும் உள்நாட்டு சண்டையும் ஆப்பிரிக்கர்களை லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக வர வழிகோலியது.
வட ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஆப்பிரிக்கா முழுதுமே உள்ள இயற்கை வளங்களை அடைவதற்காக அங்கு நடக்கும் யுத்தங்களில் பல லட்சம் மக்கள் லிபியாவினூடே மத்திய தரைகடலை கடந்து ஆபத்தான பயணங்களில் ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்.

சிரியா மற்றும் ஈரான்
மத்திய கிழக்குப்பகுதியை அமெரிக்கா தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இன்னும் தடையாக இருப்பது சிரியாவும் ஈரானும்தான் அதனால், அங்கு ஆட்சிமாற்றம் அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.
அதற்கு மத அடிப்படையிலான தீவிரவாத அமைப்புகள் மூலம் குழப்பங்கள் உருவாக்கப்படுகிறது. ஐ.எஸ். அமைப்புக்கும் சிரியா அரசுக்கும் இடையிலான யுத்தத்தால் சிரியாவிலிருந்து அதிக அளவிலான அகதிகள் உருவாக இதுவே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனாலும், ஐ.எஸ். அமைப்பின் முதல் எதிரி இலக்காக இருப்பது அமெரிக்கா என்பதையும் பின்லேடனை வளர்த்துவிட்ட அமெரிக்கா பிறகு, பின்லேடனால் தாக்கப்பட்டதையும் அமெரிக்கா மறக்கக் கூடாது.

மக்கள் சுபாவமும் மாறணும்
சதாம் உசேனும், கடாபியும் தங்கள் ஆட்சிகாலத்தில் அரசியல் எதிரிகளை தங்கள் நாட்டவர், மதத்தவர் என்ற இரக்கம்கூட இல்லாமல் பலரை கொடூரமாக அழித்திருக்கிறார்கள்.
இது உள்நாட்டு எதிரிகளை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு காய் நகர்த்த பயன்பட்டது.
அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிடலை புரிந்த பிறகும் மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் சுபாவங்களில் மாற்றமில்லாதது வருந்தத்தக்கது.
தங்களுடைய பலத்தை பற்றி யோசிக்காமலே எதிரிகளை வன்முறையில் சந்திக்க நினைப்பது தற்கொலைக்கு சமமான செயல்.
அந்த நாடுகளில் சாதாரண மனித தவறுகளுக்கும் கடுமையான மரண தண்டனைகளை நிறைவேற்றுவது ஆட்சிக்கு எதிரான அதிருப்தியாளர்களை உள்நாட்டிலே உருவாக்கும்.
மதகட்டுப்பாடு என்று சொல்லிக்கொண்டு, உடை போன்ற சாதாரண விஷயங்களில் மீறுபவர்களையும் தங்கள் மதத்தவர்கள் என்பதையும் யோசிக்காமல் அழித்து விடுகின்றனர். இந்த சுபாவங்கள் மாறாத வரை அங்குள்ள நிலைமை மாறுவது கடினமே.
தீவிரவாதிகளின் ஆயுதத்தை பயங்கரமாக பார்க்கும் மக்கள், ராணுவத்தின ஆயுதங்களை பாதுகாப்பாக நினைக்கின்றனர்.
மத்திய கிழக்குப்பகுதியில் ஒரு காந்தி கூட பிறக்கவில்லையா அல்லது அவர்களின் எதிரணியில் அதிபயங்கர கோட்சேக்களும் இருக்கிறார்களா?
அமைதிபெற, அனைத்து நாடுகளுக்கும் அவசியாமன இலக்கு, அணு ஆயுதமல்ல காந்தி ஆயுதமே! ஆனால், அதுதான் கடினமே!

-http://news.lankasri.com

























