கித்தா ஆளுங்கட்சியாகும் நோக்கம் கொண்டிருக்கிறது, ஜைட் இப்ராகிம்

எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் கித்தா (மக்கள் நல கட்சி) ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுதலான வேட்பாளர்களை நிறுத்தவிருக்கிறது.

ஆனாலும், அது பிரதமர் பதவியை நாடவில்லை. அதோடு சில தரப்பினர் முத்திரையிட்டுள்ளது போல் அது ஓர் இடைஞ்சல் அல்ல என்று கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம் கூறினார்.

மலேசியர்களின் நலன்களுக்காக அக்கட்சி போராடியதால், கித்தாதான் மிகச் சிறந்த மாற்றுக் கட்சி என்று அவர் கூறிக்கொண்டார்.

“நாம் ஆளுங்கட்சியாகும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் பிரதமர் பதவியை நாடவில்லை…அதனால்தான் வெற்றியை உறுதி செய்துகொள்வதற்கு நாங்கள் பொருத்தமான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணம் கொண்டுள்ளோம்.

“இது ஒரு வேடிக்கை பேச்சல்ல. நாங்கள் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக வரவில்லை…மக்கள் தேர்வு செய்வதற்கு நாங்கள் ஒரு வாய்ப்பைத் தருகிறோம். ஆகவே, ஆளக்கூடிய இடத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.

“கித்தா வாக்குகளைச் சிதறடிப்பதற்கான கட்சி என்று அரசியல்வாதிகள், பிகேஆர், டிஎபி உட்பட, விடும் அறிக்கைகள் சரியானதல்ல.

“பிகேஆர், பாஸ் மற்றும் டிஎபி மக்களுக்கான மாற்றுக் கட்சியாக இனிமேலும் இருக்க முடியாது ஏனென்றால் அவை வெவ்வேறான திட்டங்களையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கின்றன”, என்று அவர் நேற்று கோட்டாபாருவில் பெர்னாமாவிடம் கூறினார்.

TAGS: