“ஒரு முறையாவது நாம் சொல்லும் பதில் உண்மையானதாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட நலன்கள், குறுகிய நோக்கம், அரசியல், விரைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது.”
பிபிஎஸ்எம்ஐ: அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார் சட்ட நிபுணர்
லூ சூன் பாட்: பேராசிரியர் அப்துல் அஜிஸ் அவர்களே, ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். யாரும் தேசிய மொழியை எதிர்க்கவில்லை. அது கட்டாயப் பாடமாகும். தேசிய பள்ளித் தேர்வுகளில் முழுச் சான்றிதழைப் பெற வேண்டுமானால் மாணவர்கள் கண்டிப்பாக அந்தப் பாடத்தில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.
நமது புதிய தலைமுறையினர் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் உலகளாவிய மொழி. நமது மாணவர்கள் இரண்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அதில் என்ன தவறு?
உண்மையில் அதிகமான மொழிகளை அறிந்திருப்பது ஒருவருக்கு நல்லது. நம் நாடு வளம் பெற வேண்டுமானால் நமது தலைவர்களுக்கு நடைமுறைக்கு ஏற்ற சிந்தனை இருக்க வேண்டும். தொலை நோக்கு வேண்டும். நாம் கிராமத்து வீரர்களை உருவாக்குவதற்குப் பதில் உலக வீரர்களை உருவாக்க வேண்டும்.
டேவிட் தாஸ்: நாம் வலியுறுத்துவது இரு மொழித் தேர்ச்சி ஆகும். உலகளாவிய நிலையில் நாம் அறிவாற்றலையும் தகவல்களையும் பெறுவதற்கு ஆங்கிலம் முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும்.
மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆங்கில மொழி அறிவு தரும் நன்மைகளை அடைய முடியும் என்பதையும் ஏழ்மையில் உள்ளவர்களை ஒரே மொழி பண்பாட்டுக்குள் கட்டி வைத்திருப்பதையும் நாம் தவிர்க்க வேண்டும்.
ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கான சூழ்நிலை இல்லாவிட்டால் அந்த மொழியைக் கற்பதற்கு தூண்டுதல் இருக்காது. இரு மொழி சூழ்நிலையே நமது பிள்ளைகள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு வழி வகுக்கும். ஆங்கிலம் அவற்றுள் ஒன்றாகும். மலாய் மொழி இன்னொரு மொழியாகும். அந்த மொழி நமது தேசிய மொழி ஆகும்.
தனியார் துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியாதவர்கள் போல நடிக்கக் கூடாது. மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அந்த மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நமது பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் விரிவாகப் பயன்படுத்தப்படுவதையும் நாம் மறுக்கக் கூடாது.
அஜிஸ் பேரியின் கருத்துக்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது – அது உணர்வு அடிப்படையிலானது. அரசியலமைப்பு ரீதியானது. நமது தேசிய மொழி எல்லா நோக்கங்களுக்கும் போதுமான அல்ல என்ற நிலையை ஏற்றுக் கொள்வது சிரமம்தான்.
ஆனால் அந்த விஷயம் மீது நாம் உணர்ச்சி வசப்படக் கூடாது. குறிக்கோளுடன் இயங்க வேண்டும்.
ஆங்கிலம் உலகளாவிய மொழி. அதிகமான ஆய்வுகள் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டு அந்த மொழியில் வெளியிடப்படுகின்றன. மற்ற மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலத்தில் அதிகமான புத்தகங்கள் வெளியாகின்றன.
நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நமது நாடு இங்கிலாந்திலிருந்து பெறப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு விட்டது.
அந்தப் பாரம்பரியங்களின் அடிப்படையில் அமைந்த இலக்கியங்களையும் வெளியீடுகளையும் நாம் பயன்படுத்த வேண்டுமானால் அந்த மொழியில் ஆற்றல் அவசியமாகும்.
எடுத்துக்காட்டுக்கு ஆங்கில மொழித் தேர்ச்சி இல்லாமல் ஒரு வழக்குரைஞரைப் பயிற்றுவிக்க முடியாது. ஒருவர் வழக்குரைஞராகவும் முடியாது. நமது தேசிய நூலகத்திலும் பல்கலைக்கழக நூலகங்களிலும் ஆங்கில மொழிப் புத்தகங்களே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமகன்: கல்வி என்பது “நாடகக் காட்சிகள்” அல்ல. சுதந்திரம் பெற்ற நாள் முதல் பிஎன் அரசாங்கம் அதைத்தான் செய்து வருகிறது. விருப்பம் போல் மாற்றிக் கொண்டே இருக்கிறது. மக்கள் தாங்கள் விரும்புவதை முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
உங்கள் அடிச்சுவட்டில்: நாம் எந்த நிலையில் இருந்து வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அடிப்படைக் கேள்வி இதுதான். நமது நடப்புக் கல்வி முறையின் நிலை என்ன?
சரியான தேர்ச்சியைக் கொண்ட மாணவர்களை நாம் உருவாக்குகின்றோமா? அனைத்துலக அளவில் வர்த்தகம், அறிவியல் ஆய்வுகளை நடத்த மாணவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்ச்சியை வழங்குகின்றோமா?
மலேசியாவின் ஒற்றுமை முயற்சிகளுக்கு அது உதவுகின்றதா? சரியான சிந்தனையைக் கொண்ட குடி மக்களை உருவாக்குகின்றதா?
ஒரு முறையாவது நாம் சொல்லும் பதில் உண்மையானதாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட நலன்கள், குறுகிய நோக்கம், அரசியல், விரைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது.
நான் தெளிவாக இருக்கிறேன். தேசியப் பள்ளிகள் அந்த வேலைகளைச் செய்யவில்லை. காரணம் அங்குள்ள ஆசிரியர்களுக்குத் திறமையே இல்லை. தலமையாசிரியர்களுக்கு கடமை உணர்வே இல்லை. அவர்கள் குறுகிய சிந்தனைகளை வளர்க்கின்றனர். காலம் கடந்த வேலைப் பண்பாடுகளைப் பின்பற்றுகின்றனர். ஆகவே பிரச்னைக்கு முக்கிய அம்சம் இது தான்: நமது பள்ளிக்கூடங்கள் நம்மை ஏமாற்றி விட்டன.