தென் சீனக் கடல் விவகாரம்: தீர்ப்புக்கு எதிராக சீனா வெள்ளை அறிக்கை

  • தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி.
  • தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி.

“தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவுக்கு உரிமையில்லை’ என்று சர்வதேச தீர்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீனா புதன்கிழமை வெள்ளை அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தென் சீனக் கடல் பகுதிகள் குறித்து சீனாவுக்கும், பிலிப்பின்ஸýக்கும் இடையே நிலவி வரும் சர்ச்சைக்கு, இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் சீனா உறுதியுடன் உள்ளது.

சீனாவுக்கு சொந்தமான நான்ஸா குண்டாவ் தீவுக் கூட்டத்தில் சில தீவுகளையும், கடல் நீரடிப் பாறைகளையும் கடந்த 1970-களில் பிலிப்பின்ஸ் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததால்தான் இரு நாடுகளுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

தனது நாடு பிடிக்கும் ஆசையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, பிலிப்பின்ஸ் இந்த உண்மையை மூடி மறைத்து வருகிறது.

தென் சீனக் கடலில் பிலிப்பின்ஸ் உரிமை கோரும் பகுதிகளில் எதிலும் வரலாற்றுரீதியாகவோ, சர்வதேச சட்டரீதியாகவோ அந்த நாட்டுக்கு உரிமை கிடையாது.

அந்தப் பகுதிகள் 2,000 ஆண்டுகளுக்கும் மேல் சீனாவுக்கு சொந்தமானவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ முழு தென் சீனக் கடல் பகுதிக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

பிலிப்பின்ஸ், வியத்நாம், தைவான், மலேசியா, புரூணை ஆகிய நாடுகளும் தென் சீனக் கடலின் சில பகுதிகளுக்கு உரிமை கோரி வருகின்றன.

இதனால் அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது.

இந்த நிலையில், தென் சீனக் கடலில் சீனாவுடன் தங்களுக்கு உள்ள பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேசத் தீர்ப்பாயத்திடம் பிலிப்பின்ஸ் கடந்த 2013-ஆம் ஆண்டு முறையிட்டது.

அதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று சர்வதேச தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது எனவும், அது குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டிய வெற்றுக் காகிதம் எனவும் சீனா புதன்கிழமை தெரிவித்தது.

-http://www.dinamani.com