அடுத்தடுத்த தாக்குதல்களால் ஆடிப்போயிருக்கும் ஐரோப்பிய நாடுகள்!

isis_gainstanmerica_001ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் வைத்து ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பாதுகாப்பு சபையினை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த, எட்டு நாட்களுக்குள், அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளதால், ஐரோப்பிய நாடுகள் சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் மற்றும் ஒரு நாடான பிரான்சின் நீஸ் நகரில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 84 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், ஜேர்மனியின், தெற்கு பகுதியில், ரயிலில் பயணம் செய்த பயணிகளை இலக்கு வைத்து மற்றும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஜேர்மனியில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான தொடர் தாக்குதல்கள் காரணமாக ஜேர்மனியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு சபை கூட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் போது பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக, விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதன் போது ஐரோப்பாவில் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அதன் பின்னணி போன்ற விபரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் கூடி விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, அமெரிக்கா கடும் கண்டணம் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளன.

இதேவேளை, முனிச் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, வீடியோ மற்றும் புகைபடங்கள் இருந்தால், தங்களிடம் ஒப்படைக்கும்மாறு அந்நாட்டு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலின் பின்னணியில் மேலும் பலர் இருக்ககூடும் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

-http://www.tamilwin.com