ஜேர்மனி ஸ்டட்கார்டு பகுதியில் இடம்பெற்ற வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டட்கார்டு நகரில் உள்ள ரீட்லின்ஜென் பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் யுவதி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உயிரிழந்த அதேவேளை மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர் சிரியாவை சேர்ந்தவர் என கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஜேர்மனியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடும் ரயிலில் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முனிச் பகுதியில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்றைய தினம் இந்த வெட்டுக்கத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
தேநீர் விடுதியில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் படுகாயம்
ஜேர்மனியின் பாவரியா நகரில் அமைந்துள்ள தேநீர் விடுதி ஒன்றில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் சம்பவயிடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாவரியா நகரின் அருகாமையில் அமைந்துள்ள Ansbach பகுதியில் உள்ள தேநீர் விடுதி ஒன்றில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
குற்றவாளிகள் திட்டமிட்டே மேம்படுத்தப்பட்ட சதனத்தை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் மத்திய பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மட்டுமின்றி வார இறுதியானதால் இப்பகுதியில் ஒரு இசை விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
வெடிகுண்டு தாக்குதல் நடந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஒருவர், இது விபத்து என முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இச்சம்பவம் வேண்டுமென்றே திட்டமிட்டு மேம்படுத்தப்பட்ட கருவியால் வெடிகுண்டை இயக்கி வெடிக்க வைத்துள்ளனர் என்றார்.
முதலில் எரிவாயு கசிவு ஏற்பட்டு அதனால் வெடி விபத்து ஏற்பட்டது என கூறப்பட்டது. ஆனால் இது வெடிகுண்டு தாக்குதல் என தற்போது விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரவு 10 மணியை நெருங்கும் வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேநீர் விடுதியின் அருகாமையில் நடைபெற்று வந்த இசை நிகழ்ச்சியினை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இசை நிகழ்ச்சியினை ரசித்துக்கொண்டிருந்த 2,500 பேர் அந்த அரங்கத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பொலிஸ் மற்றும் மீட்பு படையினர் பெருமளவில் இப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுதம் தாங்கிய பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் இது இரண்டாவது சம்பவம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-http://news.lankasri.com