அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம்! 3 பேர் உயிரிழப்பு

america flagஅமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியின்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் சமீப காலமாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கறுப்பின வாலிபர்கள் இனவெறி காரணமாக வெள்ளைக்கார போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதேபோல், போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர்.

நேற்று இரவு சாண்டியாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருபோலீஸ் அதிகாரி பலியானார், மற்றொருவர் காயமடைந்தார்.

தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சியாட்டில் அருகே உள்ள முகில்டியோ நகரில் ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த மர்ம ஆசாமி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினான்.

இதில், 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போலீசார், 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர்.

லெவிஸ் கவுண்டியில் சிக்கிய அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் 15முதல் 20 பேர் வரை கூடியிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

– Maalai Malar