அந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் முஸ்லிம்களிடையே பயங்கரவாதம் பரவாமல் தடுக்க வகை செய்யும் ஏராளமான அம்சங்கள் அந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன அரசு கொண்டு வந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜின்ஜியாங் மாகாணத்துக்கு ஏற்ற வகையில் இந்த சிறப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாகாண சட்டப்பேரவையில் ஞாயிற்றுக்கிழமை இயற்றப்பட்ட இந்தச் சட்டம், திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக சீன அரசு நாளிதழான “குளோபல் டைம்ஸ்’ தெரிவித்தது.
புதிய சட்டத்தின்படி, தண்டனை முடிந்து குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் அவர்கள் சமுதாயத்துக்கு ஆபத்தானவர்களா என்பது குறித்து ஆய்வுக்குட்படுவார்கள்.
அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், குற்றவாளியை சீர்திருத்துவதற்கான வகுப்புகள் நடத்தப்படும்.
பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களும், சீர்திருத்த வகுப்புகளைப் புறக்கணிப்பவர்களும் பிற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள்.
பயங்கரவாதத்தைத் தூண்டக் கூடியது என்று கருதப்படும் எந்தவொரு கூட்டத்தையும், பேரணியையும் தடுக்க அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.
இவ்வாறு பல்வேறு அம்சங்கள் ஜின்ஜியாங் மாகாணம் கொண்டு வந்துள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்புக் காஷ்மீரையொட்டி அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில், மதவாதத் தாக்குதல்கள் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதல்களுக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கமே காரணம் என்று சீன அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
-http://www.dinamani.com