சீலாந்தை தனிநாடாக கேட்கும் ஒரே ஒரு குடும்பம்

sealandஇங்கிலாந்திற்கு அருகில் கரையிலிருந்து 6 மைல் தொலைவு கடலில் உள்ள செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு பகுதியே சீலாந்து (SeaLand) என அழைக்கப்படுகிறது.

பார்ட் வியு ஆங்கிள் என்ற ஆகாய பார்வைக்கு, ஹெலிபேட் மாதிரியான ஒரு அமைப்பு மட்டுமே தெரியும். அருகில் சென்று பார்த்தாலும் இரண்டு தூண்கள் உள்ள ஒரு துண்டிக்கப்பட்ட பாலமும் அதில் ஒரு தங்குமிட அமைப்பும் இருப்பதுபோல தெரியும். இதை எப்படி ஒரு நாடு என்கிறார்கள் என்ற குழப்பம் வரும்.

ஆனால், மக்கள் இல்லாத இந்த பகுதிக்கு தேசியக்கொடி, தேசியசின்னம் உட்பட்ட பல விஷயங்களை உருவாக்கிக் கொண்டு, இதை ஒரு தனிநாடாக கேட்டு, இங்கிலாந்து நீதிமன்றத்திலும் சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உரிமைகொண்டாடி வந்தவர் ராய்பேட்ஸ்.

சீலாந்து உருவான வரலாறு: இரண்டாம் உலகப்போரின் போது, எதிரிப் படைகள் தாக்க முற்படும் தருணங்களை கண்காணிக்க, இங்கிலாந்து அரசு கடலில் செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கியதுதான் இந்த பகுதி.

‘போர் மவுன்சல் நாவல் சீ போர்ட்’ எனும் வலுவான கோபுரங்களை அமைத்து, அதை பழமையான ராணுவ கப்பலில் பொருத்தி, அதை இங்கிலாந்து கடல் எல்லைக்கு அப்பால் 6 கி.மீ. தூரத்தில் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தி, வெடிப்பொருள்களால் வெடிக்கவைத்து, கப்பலை கடலில் மூழ்கச் செய்தனர்.

கப்பலின் உறுதியான கட்டமைப்பால் கோபுரங்கள் சேதமடையவில்லை. இதனை பயன்படுத்தி, கடலில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

செங்குத்தான கோபுரத்தில் எப்படி ராணுவ வீரர்கள் தங்கமுடியும் என கேள்விகள் எழலாம். இதற்கு இங்கிலாந்தின் கட்டுமான கலைஞர்கள் திறமையாக, குழாய்களை 7 அடுக்குகளாக பிரித்து, வடிவமைத்துக் கொடுத்தனர்.

தங்குமிடங்களை கீழ்ப்பகுதியிலும் மேல் அடுக்குகளில் போர்க்கருவிகளை வைத்துக்கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டனர்.

இரண்டு கோபுரங்களிலும் ராணுவதளவாடங்களை நிரப்பினர். ராடார் இயந்திரங்கள், இரண்டு 6 இன்ச் துப்பாக்கிகள், இரண்டு 40 எம்.எம். ஆண்டி ஆர்கிராப்ட் ஆட்டோகேனான் போன்ற ஆயுதங்களுடன் 200 ராணுவ வீரர்கள் அங்கு அடைக்கலம் புகுந்தனர்.

மேலும், அங்கேயே மாற்றுமுறையில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள், மின்சாரம் சேமித்து வைக்கும் பேட்டரிகள் கரைக்கு திரும்ப இரண்டு படகுகள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தினர்.

ஜெர்மனி படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இந்த ரப் டவர் கலக்கத்தை கொடுத்தது. அந்த கால பத்திரிகைகள் இந்த இடத்தை ’எறும்பு புற்று’ என வர்ணித்தன. இங்கு இயங்கிவந்த ராணுவ வீரர்கள் இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பின்னர் இதன் தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

கடல் கொள்ளையர்களின் ஆதிக்கம்:

இதனால், 1960 களில் ரப் டவர் கேட்பாரற்ற தளமாக கிடந்தது. பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகளும் கனரக ஆயுதங்களும் அப்படியே விடப்பட்டன.

இது நாளடைவில் கடல் கொள்ளையர்களுக்கு புகலிடமாய் போனது. சில காலம் அவர்கள் அதிக்கத்தில் இருந்தது.

கடல் கொள்ளையர்கள் சர்வதேச கடல் பகுதியில் வரும் கப்பல்களை சிறைப்பிடித்து, அதற்குரிய நாடுகளுக்கு வானொலி மூலம் மிரட்டல்விடுத்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வது வழக்கம்.

அதற்கு சில தீவுகளை பயன்படுத்தியது போல இந்த ரப் டவரையும் வானொலி நிலையமாக பயன்படுத்தி வந்தனர்.

ராய் பேட்ஸின் வானொலி மையம்:

1967 ம் ஆண்டு ராய் பேட்ஸ் என்பவர், குற்ற பய உணர்ச்சியுடைய கடல்கொள்ளையர்களிடமிருந்து இதை தந்திரமாக கைப்பற்றினார்.

கடல் கொள்ளையர்களுக்கும் ராய் பேட்சுக்கும் தொடர்பில்லை என்றாலும், ராய் பேட்ஸ் திருட்டுத்தனமாக வானொலி இயக்குவதில் வல்லவர்.

அதிகாரப்பூர்வமற்ற வானொலி அலைவரிசைகளை நடத்திய குற்றத்திற்காக பலமுறை சிறைசென்றுள்ளார்.

அப்படி சிறையில் இருந்தபோதுதான் கடல்கொள்ளையர்களுடைய தொடர்பின் மூலம் இதை அறிந்துகொண்டு, தனது 15 வயது மகன் மைக்கேலுடன் சென்று ரப் டவரை கொள்ளையர்களிடம் கைப்பற்றினார்.

பிறகு, 5 மைல் சுற்றளவில் ‘ரேடியோ எக்செஸ்’ என்ற வானொலி மையத்தை நிறுவி, அலைவரிசையை ஒலிபரப்பி வந்தார். காவலர்கள் தன்னை நெருங்கினாலும் தப்புவதற்கு வசதியாக படகையும் வைத்திருந்தார்.

சிக்கலானது சீலாந்து: சில காலம் தனியாக அங்கு வசித்துவந்த ராய் பேட்ஸ் காவலர்கள் மற்றும் கடல்கொள்ளையரிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை என தெரிந்ததும் திருமணமான மகன் உட்பட குடும்பத்தை அங்கு அழைத்துக்கொண்டார்.

அதன் நில அமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராய், அதை ’சீலாந்து’ என்ற தனி நாடாக அறிவித்தார். கொடி, சின்னம், தேசிய கீதம், அஞ்சல் தலை, அரசாங்க முத்திரை என ஒரு நாட்டிற்கான அனைத்தையும் உருவாக்கி, அதை இங்கிலாந்து அரசிற்கும் அனுப்பிவைத்து, உரிமை கொண்டாடினார்.

ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத அரசு, பிறகு, ராய் பேட்ஸின் தீவிர போக்கை புரிந்து அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியது. ஆனால், அந்த பகுதி சர்வதேச கடல்பகுதியில் இருந்ததால், சர்வதேச அமைப்புகளின் உதவியை ராய் நாடினார்.

சர்வதேச அமைப்பின் ஆலோசனையின்படி, இங்கிலாந்து நீதிமன்றம் 1987 ல் இருவேறு தீர்ப்புகளை கூறியது. இதுவே இந்த பிரச்சினையின் இழுபறிக்கு காரணமானது. இங்கிலாந்து அரசு சிறிது காலம் ராய்பேட்ஸின் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாது இருந்தது. ராய்பேட்ஸுக்கு எதிர்த்து நிற்கும் நியாயத்தை கொடுத்துள்ளது.

தனது 92 வயதில் அங்கிருந்து வெளியேறிய ராய்பேட்ஸ் இங்கிலாந்தில் குடியேறினார். இப்போது மகன் மைக்கேல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

-http://news.lankasri.com