ராட்சத எலிகள்.. அதிர வைக்கும் வழிப்பறி கொள்ளைகள்… நடுக்கத்தில் ஒலிம்பிக் ரசிகர்கள்!

rioரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டி நடக்கும் ரியோடிஜெனீரோவில் வழிப்பறி திருட்டு சம்பவம் அதிகரித்திருப்பதால் அங்கு வரும் வௌிநாட்டு பயணிகள் கடும் பீதிக்குள்ளாயிருக்கின்றனர்.

பிரேசில் நாட்டின் ரியோவில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் விளையாட்டை ரசிக்க வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர்.

ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக் தொடரை நடத்த விருப்பப்படும். தன்னுடைய நாட்டிற்கு பெருமையை வந்து சேர்வதுடன், கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வருவதால் பொருளாதார வருமானமும் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் பிரேசிலும் ஒலிம்பிக் போட்டியை நடத்தி வருகிறது.

பிரேசில் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொருளாதார நிலைமை சீராக இல்லை. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாட்டில் மக்கள் வறுமையில் வாடும்போது கோடி கணக்கான பணத்தை செலவழிப்பதா? என போராட்டம் நடைபெற்றது. பல்வேறு இடையூறுகளுக்கிடையில் ரியோ ஒலிம்பிக் தொடங்கியது.

அழகிய நகரமான ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடப்பதால் இங்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு ரசிகர்கள் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்திய இங்குள்ள உள்ளூர் திருடர்கள் வழிப்பறி செய்யும் வேலையை சர்வ சாதாரணமாக துவக்கியுள்ளனர்.

திருடர்கள் , சுற்றுலா பயணிகளிடம் அவர்கள் அணிந்திருக்கும் விலை உயர்ந்த காமிரா, மொபைல், பணப்பை, உடமைகள் பேக், நகைகள், மற்றும் கையில் வைத்திருக்கும் பொருட்களை பறித்து செல்கின்றனர்.

குரங்கு போல் திடீரென பறிப்பதும், கவனக்குறைவான நேரத்தில் பறித்து ஓடுவதும், ஆங்காங்கே சிலரை தாக்குவதையும், சில இடங்களில் திருடரை விரட்டி பிடிப்பதும் போன்ற காட்சிகள் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. அதிலும் இது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவும் வைலரலாகி வருகிறது.

வறுமையால் வாடும் உள்ளூர்வாசிகள் குறிப்பாக சிறுவர்கள் பகல் இரவு என்று பாராமல் பட்டப்பகலிலேயே சர்வசாதரணமாக திருடுகிறார்கள். குறிப்பாக கழுத்தில் கிடக்கும் நகைகள் மற்றும் கையில் வைத்திருக்கும் செல்போன்களை எளிதாக பறித்துச் செல்கிறார்கள். சில ரசிகர்கள் அவர்களை தாக்குகிறார்கள். சில ரசிகர்கள் உயிருக்கு பயந்து கேட்டதை கொடுக்கிறார்கள்.

பிரேசில் காடுகளில் மட்டுமே வசிக்கும் பிரம்மாண்ட எலிகள், சில ஜந்துக்களும் அவ்வப்போது விளையாட்டு மைதானத்திற்குள் எட்டிப்பார்க்கிறதாம். இதனால் வீரர்களும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே ஜிகா வைரஸ் அச்சுறுத்திய நிலையில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதால் மிரண்டு போன சுற்றுலா பயணிகள், ரசிகர்கள் பிரேசில் பக்கம் போவதற்கு அஞ்சி பயணத்தை ரத்து செய்வதாகவும் கூறப்படுகிறது.
tamil.oneindia.com