அகதிகள் இல்லம் துவங்கும் முடிவு: வலுக்கும் எதிர்ப்பால் கைவிட்ட அதிகாரிகள்

swissசுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் அகதிகளுக்கான இல்லம் துவங்கும் முடிவை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மண்டல நிர்வாகிகள் கைவிட்டுள்ளனர்.

யூரி மண்டலத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஹொட்டல் ஒன்றை அங்குள்ள புகலிடம்கோருவோர் 60 பேர் தங்கும் வகையில் அகதிகளுக்கான இல்லமாக மாற்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் யூரி நிர்வாகம், அந்த முடிவில் இருந்து பின்மாறுவதாக அறிவித்ததுடன், புகலிடம் கோருவோருக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மண்டலத்தின் வேறு பகுதிகளை பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சீலிஸ்பெர்க் கிராமத்தினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதால்தான் மண்டல நிர்வாகிகள் முடிவை கைவிட நேர்ந்தது. மட்டுமின்றி வெறும் 700 மக்கள் தொகை கொண்ட இந்தப்பகுதியில் 60 புகலிடம் கோருவோர் தங்குவதில் உடன்பட முடியாது எனவும் அப்பகுதி மக்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

புகலிடம் கோருவோருக்கான இல்லம் அமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில், குறிப்பிட்ட கிராமத்தின் பாதிக்கும் மேல் பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சமூக நலத்துறை அமைச்சர் மீது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பொருட்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.

அகதிகளை திறந்த மனதுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கூட்டத்தின் தலைவர் ஒருவர், தற்போதுள்ள சூழலில் அகதிகளை வரவேற்று உபசிருக்கும் நிலையில் கிராம மக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து அரசானது ஒவ்வொரு மாகாணமும் அந்த மாகாணத்தின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அகதிகளை அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதன்படி யூரி மண்டலமும் 0.5 சதவிகித அகதிகளை அனுமதிக்க வேண்டும். இந்த வரிசையில் சூரிச் மண்டலம் 17 சதவிகிதமும் பேர்ன் மண்டலம் 13.5 சதவிகிதமும் ஜெனீவா 5.6 சதவிகிதமும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com