1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள ஜோ லோ, உள்பட மற்ற தனிப்பட்டவர்கள்மீது எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ், காலிட் அபு பக்கார்மீது போலீஸ் புகார் செய்ய திட்டமிடுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி.
இவ்வளவு மெதுவாக செயல்படும் போலீஸ் 1எம்டிபி ஊழலைக் குறைகூறுவோர்மீது மட்டும் விரைந்து நடவடிக்கை எடுத்து விடுகிறது என்று கூறிய ரபிசி தம்மீதும் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
“நேற்றிரவு சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஹனிப் என்னைத் தொடர்பு கொண்டார். ஆகஸ்ட் 10-இல் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியில் அன்வார் இப்ராகிமின் 69வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூட்டத்தில் நான் ஆற்றிய உரைக்காக என்மீது விசாரணை நடப்பதாகக் கூறினார்.
“விசாரணை ஆவணங்கள் வரும் ஆகஸ்ட் 25-இல் அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது”, என பாண்டான் எம்பி ஓர் அறிக்கையில் கூறினார்.
போலீசார், கடந்த சனிக்கிழமை யுனிவர்சிடி இன்ஸ்டிடுயுட் மாரா ஸ்ரீ இஸ்கண்டார் வளாகத்தில் #TangkapMO1 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர்களைக் கைது செய்வதிலும் வேகமாக செயல்பட்டிருக்கிறார்கள் என ரபிசி தெரிவித்தார்.
ஆனால், 1எம்டிபி ஊழலுடன் தொடர்புகொண்டுள்ள தனிப்பட்டவர்கள்மீது எவ்வளவோ காலத்துக்குமுன் எத்தனையோ புகார்கள் செய்யப்பட்டிருந்தாலும் அதேபோன்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றவர் சாடினார்..
விதியோ நீதியோ இறைவா நான் அறியேன்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல் இது நமக்கு தெரிந்த விசியம்தானே நமது போலீஸ் படை தலைவரின் விசுவாசம் !
ஐஜிபி இன்னும் கொஞ்சம் நாளைக்கு பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கும் உலை வைக்கிறீரே!