சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் காலமானார்!

nathanதமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார்.

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன். இவரது குடும்பம் தமிழக வம்சாவளியை சேர்ந்தது.

ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கும் பர்வாசி பாரதிய சன்மான் விருது கடந்த 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட எஸ்.ஆர்.நாதன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.

எனினும், மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் உள்ள அரச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி எஸ்.ஆர்.நாதன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் அவர்களின் இறுதி சடங்குகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வியாழக்கிழமை முதல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் மறைவால், நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை அரச அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com