தேர்தல் சீர்திருத்தங்கள்மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி) அமைப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கிக்கொள்ள தேர்தல் ஆணையம் விரும்பவில்லை.
இன்று செய்தியாளர்கள், இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்பிடம் அரசாங்கம் முன்மொழிந்த அக்குழுவில் இடம்பெறுவோர் குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அவர் கருத்துக்கூற மறுத்தார்.
அவரின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் போல் அல்லாது அப்துல் அசீஸ் அவ்விசயத்தை விட்டு விலகியிருக்க விரும்புவதாகவே தெரிகிறது. வான் அஹ்மட், தேர்வுக்குழுவில் தேர்தல் சீர்திருத்தத்துக்குப் போராடும் பெர்சே 2.0-ஐயும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
தேர்தல் நடைமுறைகள் சீரமைக்கப்படும்வரை தேர்தல்-இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற மாற்றரசுக் கட்சியினரின் கோரிக்கை குறித்தும் அசீசின் கருத்து வினவப்பட்டது.
“அது பற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை. எப்போது தேர்தல் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமருக்கு உரியது.
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் இசி 60 நாள்களுக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும்.”
அதற்குள் அக்குழு அதன் பணியை முடிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி இசி கவலைப்படாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்றாரவர். அப்துல் அசீஸ், இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் இசி தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பிஎஸ்சி பற்றிய விவரங்கள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றும் அதன் தொடர்பில் இசி பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசை திங்கள்கிழமை சந்துக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை நஸ்ரி, ஒன்பது பேரடங்கிய நாடாளுமன்றத் தேர்வுக்குழுவை அமைக்க அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.அக்குழுவில் அரசுத்தரப்பு எம்பிகள் ஐவரும் மாற்றரசுக்கட்சி எம்பிகள் மூவரும் ஒரு சுயேச்சை எம்பியும் இடம்பெறுவர் என்றாரவர்.
அம்முடிவுக்கு பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். குழுவில் தங்களுக்குக் கூடுதல் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் மாற்றரசுக் கட்சி எம்பி ஒருவரே குழுவின் தலைவராக இருத்தல் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அடுத்த தேர்தலுக்குமுன் தேர்தல் சீர்திருத்தங்கள் செய்துமுடிக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் அவர்கள் கோரினர். அதற்கு மறுப்புத் தெரிவித்த நஸ்ரி, குழுவின் பரிந்துரைகளை இயன்ற விரைவில் நடைமுறைப்படுத்த அரசு முயலும் என்றார்.