வாக்காளர் பட்டியலில் தவறுகள் 0.0001 விழுக்காடே என்கிறது இசி

வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதை இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள 12.4 மில்லியன் வாக்காளர்களில் அவை 0.0001 விழுக்காடே என்று அவர் சொன்னார்.

“12.4 மில்லியனுக்கு 0.0001 விழுக்காடு என அந்த எண்ணிக்கை சிறிதாக இருந்தாலும் நாங்கள் அன்றாடம் அவற்றைத் துப்புரவு செய்து வருகிறோம்”, என புத்ராஜெயாவில் இசி தலைமையகத்தில் நிருபர்களிடம் அவர் கூறினார்.

இரட்டை அடையாளங்கள், ‘கம்போங் பாரு’ எனப் பெயரில் ஒரு வாக்காளர், இல்லாத மை கார்டு எண்களுடன் வாக்காளர்கள் போன்றவை உட்பட வாக்காளர் பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்ட பல்வேறு குளறுபடிகள் பற்றி அண்மைய காலமாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பற்றி அவர் கருத்துரைத்தார்.

“நாங்களும் மனிதர்களே, நாங்களும் தவறு செய்கிறோம். நிருபர்கள் சில சமயங்களில் தவறாக செய்தியைக் கொடுத்து விடுகின்றனர். எங்கள் எழுத்தர்களுக்கும் அது பொருந்தும். எங்கள் தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். அது நியாயமல்ல.”

தாம் “சிறிய தவறுகள்” எனக் கூறிக் கொள்ளும் விஷயங்களை மிகைப்படுத்திய எதிர்க்கட்சிகளையும் இணைய ஊடகங்களையும் அவர் சாடினார்.

“எங்களுடன் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதில் அக்கறை கொண்டவர்கள்- பாஸ் கட்சியும் எங்களை அடிக்கடி அழைக்கும் மலேசியாகினியும்-  அவற்றின் நிருபர்கள் இங்கு இருக்கின்றனரா என்பது எனக்குத் தெரியாது. உங்களிடம் விவரங்கள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் அதனை உறுதி செய்வோம். நாம் ஏன் ஒன்றாக வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தக் கூடாது ?”

“ஆனால் அவை ஊடகங்களில் செய்தியை வெளியிடுகின்றன. ஒரிரு விஷயங்கள். (அது குறித்து பெரும் சர்ச்சையை உருவாக்குகின்றனர்) வாக்காளர் பட்டியலில் முக்கால் பகுதி கறை படிந்தது என்பதைப் போல அதனைப் பெரிதுபடுத்துகின்றன. ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை மிகவும் சிறியது,” என அப்துல் அஜீஸ் கூறிக் கொண்டார்.

அப்துல் அஜிஸ் சொல்வதை அடிப்படையாக எடுத்துக் கொண்டால் வாக்காளர் பட்டியலில் 1,240 தவறுகள் இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

TAGS: