புவா: செலவில்லாமலேயே வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கலாம்

வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க அரசாங்கம்  உதவித்தொகை என்ற பெயரில் செலவிடும் தொகை அதிகரித்துகொண்டே போகிறது. ஆனால் ஒரு காசு செலவில்லாமலேயே  அப்பிரச்னைக்குத் தீர்வுகாணலாம் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப்பிரிவுச் செயலாளர் டோனி புவா.

டிஏபியின் சீபூத்தே எம்பி தெரேசா கொக்கின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய டோனி புவா, ஏகபோக-எதிர்ப்பு மற்றும் போட்டிக்கு இடம்கொடுக்கும் கொள்கைகளைப் பின்பற்றி அதைச் சாதிக்கலாம் என்றார்.

“கொள்கைகள்தான் விலை உயர்வுக்குக் காரணமாக அமைகின்றன. இக்கொள்கைகளை மாற்ற வேண்டும். அதற்கு அரசாங்கம் ஒரு காசுகூட செலவுசெய்ய வேண்டியதில்லை”, என்றாரவர்.

அரிசி ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியவர், பெர்னாஸ் தனியார் மயம் ஆக்கப்பட்டபின்னரும்கூட நாட்டில் அரிசியை இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமை அதற்கு மட்டுமே உண்டு என்றார்.

“தாய்லாந்திலிருந்து நல்ல தரமான அரிசையை இறக்குமதி செய்து மலேசியர்களுக்குக் குறைவான விலைக்கு விற்க முடியும் என்றால் அதை ஏன் செய்யக்கூடாது?”

பெட்ரோலுக்கு உதவித் தொகை வழங்கி அதன்(ஆர்ஓஎன்95) விலையை லிட்டருக்கு ரிம1.90 என்று நிலைப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் அரசாங்கம், பெட்ரோல் நிறுவனங்கள் விலையை ரிம1.90இலிருந்து குறைப்பதைத் தடுக்கிறது என்றும் கூறினார்.

மக்களின் பணத்தில் பெட்ரோனாசையும் மற்றவற்றையும் பாதுக்காக்கும் நோக்கம்தான் அதற்குக் காரணமாகும் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பியுமான அவர் சொன்னார்.

போட்டிக்கு இடமளித்தால் விலை குறையும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஏர்ஏசியா.2001-இல் ஏர்ஏசியா வந்த பின்னால் உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் பாதியாகக் குறைந்தது.

ஆனால்,அதே வேளை போட்டிபோட முடியாமல் தடுமாறும்  மலேசிய வினான நிறுவனத்தைப் பாதுகாக்க அதற்கும் ஏர்ஏசியாவுக்குமிடையில் பங்குகளை மாற்றிக்கொள்ளும் ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.

 ‘போட்டிதான் தீர்வு’

அரசாங்கம் மக்களின் நலனைப் பலியிட்டு தனக்கு வேண்டிய நிறுவனங்களைப் பாதுகாக்க முற்படாமல் நிறுவனங்களுக்கு இடையில் போட்டிக்கு இடமளிக்க வேண்டும்.

மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர்,  தாய்லாந்தில் மின் உற்பத்தியாளர்கள் எரிபொருள் வாங்க செலவிடும் தொகை ரிம23 என்றார். இங்கு தனியார் மின் உற்பதியாளர்கள்(ஐபிபி) அதே அளவு எரிபொருள் வாங்க ரிம13.70தான் செலவிடுகிறார்கள்.

ஆனால், மலேசியாவில் 500kW மின்சாரத்தின்  கட்டணம் ரிம157. தாய்லாந்தில் அது ரிம129.

“அரசாங்கம் நிறைய உதவித் தொகை கொடுப்பதாகச் சொல்கிறது. ஆனால், அவை நம்மை வந்து சேர்வதில்லை. ஐபிபி-க்களே விழுங்கி விடுகின்றன.”

இதே கருத்தை எதிரொலித்த சமூக மேன்மைக்கான ஆய்வு என்னும் சிந்தனைக் குழுவின் நிர்வாக இயக்குனர் தே ச்சி சாங், 2000-இல் ரிம7.6பில்லியனாக இருந்த உதவித் தொகை இவ்வாண்டில் ரிம33 பில்லியனாக உயர்ந்துள்ளது என்றார்.

அரசாங்கம் கெடாய் ரக்யாட் 1மலேசியா(Kedai Rakyat 1Malaysia ), மெனு ரக்யாட் 1மலேசியா(Menu Rakyat 1Malaysia ) என்று உதவித் தொகைத் திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது.ஆனாலும் வாழ்க்கைச் செலவினம் உயர்வதைத் தடுக்க முடியவில்லை.

உதவித்தொகை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் நாட்டின் கடனும் பெருகியுள்ளது. 2004-இல், ரிம217பில்லியனாக இருந்த கடன் இன்று இரு மடங்கு பெருகி ரிம427பில்லியன் ஆகியுள்ளது.

அந்த வகையில் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவில்லை என்று தே கூறினார்,

TAGS: