- டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி. நாள்: செவ்வாய்க்கிழமை.
“”பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்; பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசு முழு ஆதரவு அளித்துள்ளது.
பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர் ஆகியோரும் தலைமை வகித்தனர். இரு தரப்பிலும் உயர்நிலை பிரதிநிதிகள் குழுக்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், இருதரப்பு விவகாரங்கள் தவிர, முக்கியமான பிராந்திய மற்றும் உலக நடப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
பின்னர், சுஷ்மா ஸ்வராஜும், ஜான் கெர்ரியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது: சர்வதேச சமூகத்துக்கு சவாலாகவும், சர்வதேச அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் பயங்கரவாதம் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தோம்.
குறிப்பாக, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களால் இந்தியாவும், இந்தப் பகுதியில் உள்ள பிற நாடுகளும் தொடர்ந்து சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கெர்ரியிடம் எடுத்துரைத்தேன்.
இந்த விஷயம் குறித்து இருவரும் ஒரே மனவோட்டத்தில் விவாதித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
எந்தவொரு நாடும், பயங்கரவாதிகளை நல்லவர்கள், தீயவர்கள் என்று தரம் பிரித்து, இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கக் கூடாது என்பதிலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாகவோ, பாதுகாப்பு அரணாகவோ இருக்கக் கூடாது என்பதிலும் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கும், லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் அந்த நாட்டரசு புகலிடம் அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் இந்தக் கோரிக்கைக்கு ஜான் கெர்ரி ஆதரவு அளித்தார்.
மேலும், 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாதத் தாக்குதல், பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் அரசு விரைவில் தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கைக்கும் ஜான் கெர்ரி ஆதரவு அளித்தார்.
கெர்ரியுடனான சந்திப்பு, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு ஜான் கெர்ரிக்கு நன்றி தெரிவித்தேன்.
உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இது பரஸ்பர நலன் சார்ந்ததாகும். இச்சூழ்நிலையில், அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகவும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகவும் அமெரிக்காவுடன் தொடர்ந்து நெருங்கிப் பணியாற்ற இந்தியா விரும்புகிறது.
அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியப் பணியாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அளிப்பது, எச்1பி விசா கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது ஆகிய பிரச்னைகளுக்கு நேர்மையான, பாரபட்சமற்ற தீர்வு காணப்பட வேண்டும் என்றார் சுஷ்மா.
அதைத் தொடர்ந்து ஜான் கெர்ரி கூறியதாவது: எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் ஆகியோரிடம் கூறியிருக்கிறேன்.
இந்தியாவும், அமெரிக்காவும் பாதுகாப்பு, எரிசக்தி, இணையவெளிப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன.
உலக அளவில் இணையவெளியில் உருவாகும் புதிய அச்சுறுத்தல்களில் இருந்து இரு நாடுகளும் தங்களைக் காத்துக் கொள்ள இந்தியாவுடன் ஒரு கட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா விரும்புகிறது.
6 அணு உலைகள்: கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களுக்கு மின்சார வசதியை அளிப்பதற்கு உதவும் வகையில் 6 அணு உலைகளை அமைப்பது என்ற ரீதியில் இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பைக் கொண்டு செல்ல அமெரிக்கா விரும்புகிறது என்றார் ஜான் கெர்ரி.
-http://www.dinamani.com